ECONOMYMEDIA STATEMENTNATIONAL

போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவர்களை அடையாளம் காணும் பணி தீவிரம்- ஆயோப் கான்

பாசீர் மாஸ், மே 24- தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படவிருக்கும் “ஓப்ஸ் தாப்பிஸ்“ இயக்கத்தின் வழி அனைத்துலக போதைப் பொருள் கடத்தல் கும்பல்களின் மூளையாகச் செயல்படும் நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையை அரச மலேசிய போலீஸ் படை தீவிரப்படுத்தவுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் இடைத்தரகர்களாக செயல்படுவோர் என நம்பப்படும் 2,100 நபர்களை தாங்கள் கைது செய்துள்ள வேளையில் அவர்களை பின்னால் இருந்து இயக்கி வரும் முக்கிய நபர்களை அடையாளம் காணும் முயற்சியில்  தாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக பேதைப் பொருள் தடுப்பு விசாரணைத் துறையின் இயக்குநர் டத்தோ  ஆயோப் கான் மைடின் பிச்சை கூறினார்.

இந்நாட்டில் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையில் அனைத்துலக போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பிருப்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக, கிளந்தானில் பெரும்பாலான போதைப் பொருள்கள் அண்டை நாட்டிலிருந்து கடத்தப்படுகின்றன என்று அவர் சொன்னார்.

இங்குள்ள ரந்தாவ் பாஞ்சாங், சுங்க, குடிநுழைவுத், தனிமைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு தொகுதிக்கு வருகை புரிந்து மலேசிய-தாய்லாந்து நுழைவாயில் பாதுகாப்பு செயலாக்கத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக அவர், சுங்கை கோலாக் ஆற்றோரம் நெடுகிலும் உள்ள சட்டவிரோத வழிகளை ஆய்வு செய்தார்.

கிளந்தானில் 175 சட்டவிரோத குறுக்கு வழிகள் உள்ளதாக கூறிய அவர், அவற்றில் 135 வழிகள் கடத்தல் நடவடிக்கைகளுக்காக தீவிரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :