ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஆதரவுக் குறைவின் எதிரொலி – கைவிடப்பட்ட நிலையில் 70,000 டாக்சிகள்

ஷா ஆலம், மே 26- பொது மக்கள் மத்தியில் டாக்சிக்கான தேவை குறைந்து வரும் காரணத்தால் சுமார் 70,000 டாக்சிகள் கைவிடப்பட்ட நிலையில் பயன்படுத்தப்படாத பழைய இரும்புச் சாமானாக மாறி வருகின்றன.

டாக்சி சேவைத் துறையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அத்துறை சுமார் 290 கோடி வெள்ளி இழப்பை எதிர்நோக்கியுள்ளதாக மலேசிய டாக்சி ஓட்டுநர் சங்க சம்மேளனத்தின் தலைவர் கமாருடின் முகமது ஹூசேன் கூறினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் டாக்சிக்கான தேவை குறைந்து வரும் நிலையில் ஈராண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கோவிட்-19 பெருந்தொற்றுப பரவல் நிலைமையை மேலும் மோசமாக்கி விட்டது என்று அவர் சொன்னார்.

இந்த பாதிப்பை எதிர்நோக்கியவர்களில் பெரும்பாலோர் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர்கள் என்று அவர் தெரிவித்தார்.

சபா, சரவா உள்பட நாடு முழுவதும் உள்ள 110,000 டாக்சி ஓட்டுநர்களில் 40,000 பேர் மட்டுமே இத்துறையில் இன்னும் தாக்குப் பிடித்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அவர்களில் சுமார் 60 விழுக்காட்டினர் இத்தொழிலை கைவிடும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாததால் டாக்சிக்கான வாடகையைக் கூட செலுத்த இயலாத நிலையில் அவர்கள் உள்ளனர் என்றார் அவர்.

கட்டுப்பாட்டு விவகாரங்களில் இ-ஹெய்லிங் எனப்படும் மின் அழைப்பு வாடகைக் கார்களுக்கும் டாக்சிகளுக்குமிடையே சமநிலையான போக்கு இல்லாததால் பொது மக்களுக்கும் டாக்சி சேவைக்கும் இடையே இடைவெளி அதிகரித்து விட்டது என்றும் அவர் சொன்னார்.


Pengarang :