ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மார்பகப் புற்று நோய் அதிகரிப்பு- “சிலாங்கூர் சாரிங்“ திட்டத்தில் பரிசோதனை மேற்கொள்ள மகளிருக்கு வலியுறுத்து

ஷா ஆலம், மே 26- சிலாங்கூர் அரசின் இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டமான “சிலாங்கூர் சாரிங்“ வழி மார்கப் புற்று நோய்த் தொடர்பான சோதனையை  மேற்கொள்ளும்படி மாநிலத்திலுள்ள மகளிர் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நாட்டில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நோயாக மார்பக புற்றுநோய் விளங்குவதோடு நாட்டிலுள்ள மொத்த நோயாளிகள் எண்ணிக்கையில் இத்தரப்பினர் 17.7 விழுக்காடாக உள்ளதாக பொது சுகாகாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

முன்கூட்டியே பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் இந்நோய் மோசமான கட்டத்தை அடைவதற்கு முன்னரே உரிய சிகிச்சைப் பெற முடியும். இந்நோய் கடுமையாகும் பட்சத்தில் கீமோதெராப்பி உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு அதிக பணச் செலவு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

செலங்கா செயலியில் உள்ள தொடக்கக்கட்ட சோதனை பாரத்தில் வழங்கப்படும் விபரங்களைக் கொண்டு செய்யப்படும் இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த சோதனைக்கான வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

சிலாங்கூர் அரசு இந்த “சிலாங்கூர் சாரிங்“ திட்டத்திற்காக 34 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. இதில் எட்டு விதமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்தின் வாயிலாக 39,000 பேர் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இலவச மருத்துவப் பரிசோதனை தொடர்பான மேல் விபரங்களை  selangorsaring.selangkah.my  என்ற அகப்பக்கம் வாயிலாக அல்லது 1-800-22-6600 என்ற செல்கேர் ஹோட்லைனைத் தொடர்பு கொள்ளலாம். இது தவிர  drsitimariah.com/talian-suka  எனும் அகப்பக்கம் வாயிலாக சிலாங்கூர் சமூக தன்னார்வலர் அமைப்புடனும் தொடர்பு கொள்ள முடியும்.

 


Pengarang :