ECONOMYMEDIA STATEMENT

சுபாங் ஜெயா வட்டாரத்தில் மே 14 வரை 1,143 டிங்கி சம்பவங்கள் பதிவு

சுபாங் ஜெயா, மே 26- இம்மாதம் 14 ஆம் தேதி வரையிலான 19 வது நோய்த் தொற்று வாரத்தில் 1,143 டிங்கி காய்ச்சல் சம்பவங்களை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் அடையாளம் கண்டுள்ளது.

கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் 735ஆக இருந்த சம்பவங்களுடன்  ஒப்பிடுகையில் இவ்வாண்டில் பதிவான டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை 50 விழுக்காடு அதிகமாகும் என்று மாநகர் மன்ற டத்தோ பண்டார் டத்தோ ஜோஹாரி அனுவார் கூறினார்.

நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ள இடங்கள் குறிப்பாக வீடமைப்பு பகுதிகள், கட்டுமானப் பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகள் மீது தமது தரப்பு தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வரவுள்ளதாக அவர் சொன்னார்.

டிங்கி பரவும் சாத்தியம் அதிகம் உள்ள ஆறு இடங்களை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் அடையாளம் கண்டுள்ளது. பின்புறச் சாலைகள், சமூக வேளாண் திட்டப் பகுதிகள் மற்றும் சட்டவிரோத குப்பை கொட்டும் இடங்கள் ஏடிஸ் கொசுக்கள் அதிகம் பரவும் இடங்களாக உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

நேற்று இங்குள்ள சுபாங் ஜெயா மாநகர் மன்ற தலைமையகத்தில் நடைபெற்ற மாநகர் மன்றத்தின் மாதாந்திர கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பொது மக்கள் பத்து நிமிடங்களைச் செலவிடுவதன் மூலம் தங்கள் சுற்றுப்புறங்களில் உள்ள ஏடிஸ் கொசுக்கள் பரவும் இடங்களை அழிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :