ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHNATIONAL

சபாக் பெர்ணமில் வரும் சனியன்று இலவச மருத்துவ பரிசோதனை

கோல சிலாங்கூர், மே 26- மாநில மக்களின் உடல் நிலை தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள உதவும் “சிலாங்கூர் சாரிங்“ திட்டம் வரும் சனிக்கிழமை சபாக் பெர்ணம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.

சபாக் மற்றும் ஆயர் தாவார் சட்டமன்றத் தொகுதிகள் நிலையிலான இந்த இலவச பரிசோதனைத் திட்டம் சபாக் பெர்ணம், டேவான் துன் ரசாக்கிலும் சுங்கை பாஞ்சாங் தொகுதி நிலையிலான பரிசோதனை இயக்கம் சுங்கை பெசார், டேவான் சுங்கை லீமாவிலும் நடைபெறும் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

பொது மக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்கள் உடல் நிலையைச் சோதித்துக் கொள்ளலாம். ஏதேனும் நோய்கள் இருந்தால் அவர்கள் தொடர் சிகிச்சைகள் பெறுவதற்கான ஏற்பாட்டை நாங்கள் செய்வோம் என அவர் சொன்னார்.

விவேக கைப்பேசி அல்லது செலங்கா செயலி இல்லாதவர்கள் கவலைப்பட வேண்டாம். இத்திட்டத்திற்கு பதிவு செய்ய எங்கள் பணியாளர்கள் உங்களுக்கு உதவுவார்கள் என அவர் குறிப்பிட்டார்.

இந்த இலவச மருத்துவ பரிசோதனை இயக்கத்தை சீராக மேற்கொள்வதற்கு ஏதுவாக பொருத்தமான இடத்தில் இதனை ஏற்பாடு செய்யும்படி தொகுதி சேவை மையங்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்களை சித்தி மரியா கேட்டுக் கொண்டார்.

ஈஜோக் தொகுதியில் பள்ளி மண்டபம் இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு அனைத்து வசதிகளும் உள்ளதால் பரிசோதனை இயக்கம் சீராக நடைபெறுகிறது ஆகவே மற்ற தொகுதிகளிலும் இத்திட்டத்திற்கு பொருத்தமான இடத்தை தேர்வு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

இந்த இலவச பரிசோதனைத் திட்டத்தை மாநிலம் முழுவதும் மேற்கொள்வதற்கு மாநில அரசு 34 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் வழி சுமார் 39,000 பேர் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 


Pengarang :