ECONOMYNATIONAL

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு, கட்சித் தாவல் சட்ட மசோதா குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம்- பக்கத்தான் பரிந்துரை

ஷா ஆலம், மே 27– கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதா குறித்து விவாதிப்பதற்கு ஏதுவாக நாடாளுமன்றம் விரைந்து கூட்டப்பட வேண்டும் என பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

மேலும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் தொடர்பில் விவாதம் நடத்துவதற்கும் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று அக்கூட்டணியின் தலைவர் மன்றம் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை கேட்டுக் கொண்டது.

இது தவிர, நாடு கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்நோக்கியிருந்த சமயத்தில் சுகாதாரத் துறையின் கொள்முதல் நடவடிக்கைகளில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வெளியிட்ட தகவல் தொடர்பிலும் விவாதம் நடத்தப்பட வேண்டும் அந்த கூட்டணி வெளியிட்ட கூட்டறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டறிக்கையில் கெஅடிலான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சித் தலைவர் முகமது சாபு, ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் சியு ஃபூக், அப்கோ கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ வில்பரட் மேடியஸ் தாங்காவ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதா மீது விவாதம் நடத்துவது தொடர்பில் அளித்த வாக்குறுதியை டத்தோஸ்ரீ இஸ்மாயில் நிறைவேற்ற வேண்டும். இதற்கு முன்னர் பல முறை அந்த சட்ட மசோதா மீது விவாதம் நடத்தப்படும் என்று அவர் வாக்குறுதியளித்துள்ளார். ஆகவே, அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்ற வேண்டும் என ஹராப்பான் கூட்டணி வலியுறுத்தியது.

ஆகவே, மேற்கண்ட அனைத்து விவகாரங்களும் விரைந்து விவாதிப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை பிரதமர் மேற்கொள்வார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என அது குறிப்பிட்டது.

பெர்சத்து கட்சியிலிருந்து விலகி பார்ட்டி பங்சா மலேசியா கட்சியில் இணைவதற்காக தாம் வகித்து வரும் தோட்டத் தொழில்துறை மற்றும் மூலத் தொழில் அமைச்சர் பதவியைத் துறப்பதாக டத்தோ ஜூரைடா கமாருடின் நேற்று அறிவித்திருந்தார்.

அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் ஈராண்டுகளுக்கு முன்னர் கெஅடிலான் கட்சியிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :