ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை – கையுறைத் நிறுவன இயக்குநர் மீது குற்றச்சாட்டு

ஷா ஆலம், மே 27- ஈராண்டுகளுக்கு முன்னர் சுமார் பத்து லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது தொடர்பில் கையுறைகளை வாங்கி விற்கும் நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

என்.எம்.கியு.கியு. டிரேட் சென். பெர்ஹாட் நிறுவனத்திற்கு சொந்தமான 13 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளியை 14 சட்டவிரோதப் பரிவர்த்தனைகள்  மூலம் வேறு ஒன்பது நிறுவனங்களின் வங்கி கணக்கிற்கும் தமக்குச் சொந்தமான இரு வங்கிக் கணக்குகள் உள்பட ஐந்து தனிநபர் வங்கி கணக்குகளுக்கு மாற்றியதாக மஸ்னி சே முகமது அமின் (வயது 32) மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

கடந்த 2020 அக்டோபர் 9 ஆம் தேதிக்கும் 17 ஆம் தேதிக்கும் இடையே சுங்கை பீசியிலுள்ள வங்கி ஒன்றில் இக்குற்றத்தைப் புரிந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் மறுத்து விசாரணை கோரினார்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரையிலானச் சிறைத்தண்டனை, பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்பட்ட சட்டவிரோத பணத்தின் மதிப்பில் ஐந்து மடங்குத் தொகை அல்லது 5 லட்சம் வெள்ளி அபராதம் விதிக்கப்படும்.

குற்றம்சாட்டப்பட்டவரை 50,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்கவும் அவரின் அனைத்துலக கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் நோர் ஜலிஸான் லசாருஸ் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

எனினும், மஸ்னி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் லோக்மான் மஸ்லான், ஜாமீன் தொகையை 20,000 வெள்ளியாக குறைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

குற்றஞ்சாட்டப்பட்டவரை 20,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி இந்த வழக்கை வரும் ஜூன் 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Pengarang :