ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

குப்பை அகற்றும் முறையை மேம்படுத்தும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்வைப்பீர்- துணை சபாநாயகர் கோரிக்கை

கோல லங்காட், மே 30- மாநிலத்தில் குப்பை அகற்றும் முறையை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானத்தை வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது தாக்கல் செய்யும்படி சட்டமன்ற உறுப்பினர்களை மாநில சட்டமன்றத் துணை சபாநாயகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதில் ஒட்டு மொத்த உலகமும் சவாலை எதிர்நோக்கியுள்ள நிலையில் இவ்விவகாரம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்படுவது கவனத்தை ஈர்க்கும் ஒரு அம்சமாக விளங்கும் என்று ஹஸ்னுள் பகாருடின் கூறினார்.

அண்மையில் ஆஸ்திரேலியாவின் நியு சவுத் வேல்ஸ் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் சங்க நிகழ்வில் மாநில சட்டமன்ற சபாநாயகர் இங் சுயி லிம், பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின், கம்போங் துங்கு உறுப்பினர் லிம் யீ வேய் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன்.

அந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து அறிந்து கொள்வதற்குரிய வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கழிவுப் பொருள் மேலாண்மை மற்றும் மறுசுழற்சி போன்றவை அந்த நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒரு  முக்கியப் பிரச்னையாக உள்ளது தெரிய வந்தது என்றார் அவர்.

ஆகவே, மறுசுழற்சிப் பணிகளை சீராக மேற்கொள்வதற்கு ஏதுவாக வீடுகளில் சேரும் குப்பைகளை பிரித்தெடுக்கும் முறையை மேம்படுத்துவது தொடர்பில் சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றை முன்மொழியும்படி சட்டமன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இங்குள்ள ஸ்ரீ ஜூக்ரா மண்டபத்தில் நேற்றிரவு நடைபெற்ற மோரிப் தொகுதி ஏற்பாட்டிலான நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பின் போது அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அவர் செய்தியாளர்களிடம்  இதனைத் தெரிவித்தார்.


Pengarang :