ECONOMYSELANGOR

வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க இன்வெஸ்ட் சிலாங்கூர் நடவடிக்கை

கோலாலம்பூர், ஜூன் 3- வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க இன்வெஸ்ட் சிலாங்கூர் மூலம் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் அடிப்படையில் சிலாங்கூரை தங்களின் முதலீட்டுத் தளமாக ஆக்குவதில் ஆர்வம் காட்டும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை இலக்காக கொண்டு அது பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகிறது.

பெருந்தொற்றுக்குப் பின்னர் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளை கருத்தில் கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர்வதற்காக தாங்கள் பல்வேறு திட்டங்களை அமல் படுத்தி வருவதாக இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஹசான் அஸாரி கூறினார்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு தளர்வுகள் மாநிலத்திற்கு நல்ல அறிகுறியாக விளங்குகின்றன. இதன் மூலம் நாட்டிற்கு வரும் வெளிநாட்டினர் குறிப்பிட்ட காலத்திற்கு தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நேரடி பங்கேற்பின் மூலம் அதிகளவிலான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள இது வழி வகுக்கும் என அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு முதலீட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் திட்டங்களுக்கு மறுபடியும் புத்துயிரளிக்கப்படும். அதோடு மட்டுமின்றி, வரும் அக்டோபர் 6 முதல் 9 வரை சிப்ஸ் எனப்படும் அனைத்துலக வாணிக உச்ச நிலை மாநாட்டை மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் 8 முதல் 12 ஆம் தேதி வரை அனைத்துலக வான் கண்காட்சியும் சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது என அவர் சொன்னார்.


Pengarang :