ECONOMYMEDIA STATEMENT

சாலையோரம் நின்றவர்களை லோரி மோதியது- இருவர் மரணம்

ஷா ஆலம், ஜூன் 3- கோலாலம்பூர்-கோலா சிலாங்கூர் சாலையின் 11.5 வது கிலோ மீட்டரில் நேற்று மாலை 4.00 மணியளவில் நிகழ்ந்த விபத்தில் சிரம்பானில் பணிபுரியும் சுகாதார அமைச்சின் மேலாளர் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சக்கரத்தில் காற்று போன நிலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் அருகே நின்றிருந்தவர்கள் மீது லோரி ஒன்று மோதியதில் 55 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க அவ்விருவரும் உயிரிழந்ததாக  கோல சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன் ரம்லி காசா கூறினார்.

கோலாலம்பூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது சாலையோரம் கூட்டமாக சிலர் நிற்பதைக் கண்ட லோரி ஓட்டுநர் அவர்களை தவிர்க்கும் நோக்கில் லோரியை வலது புறமாகத் திருப்ப முயன்றுள்ளார். அச்சமயம் பின்னால் மெர்சடிஸ் பென்ஸ் கார் ஒன்று வருவதை உணர்ந்த அவர் மறுபடியும்  இடப்பக்கம் திருப்ப லோரி சாலையோரம் நின்றிருந்த அவ்விரு ஆடவர்களையும் மோதித் தள்ளியது என்றார் அவர்.

இச்சம்பவத்தில் தலையில் பலத்த காயங்களுக்குள்ளான அவ்விரு ஆடவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக இன்று இங்கு வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

இவ்விபத்தில் பலியான இருவரின் சடலங்களும் பரிசோதனைக்காக தஞ்சோங் காராங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக கூறிய அவர், இச்சம்பவம் தொடர்பில் 987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :