ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

பெர்மிட் இன்றி மருந்துகளை ஏற்றி வந்த படகு தடுத்து வைப்பு- ஏ.பி.எம்.எம். நடவடிக்கை

ஷா ஆலம், ஜூன் 12- கோலக் கிள்ளான், தஞ்சோங் ஹராப்பான் பகுதியில் முறையான பெர்மிட் இன்றி கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளை ஏற்றி வந்த படகு ஒன்றை ஏ.பி.எம்.எம். எனப்படும் மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவன அதிகாரிகள் தடுத்து வைத்தனர்.

கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் படக்கொன்று பயணிப்பது தொடர்பில் கிடைத்த உளவுத் தகவலைத் தொடர்ந்து நேற்று மாலை 6.30 மணியளவில் தமது பிரிவு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு அந்த படகை தடுத்து வைத்ததாக சிலாங்கூர் மாநில ஏ.பி.எம்.எம். இயக்குநர் கேப்டன் வி.சிவக்குமார் கூறினார்.

அந்த படகிலிருந்த 23 முதல 62 வயது  வரையிலான ஐந்து இந்தோனேசியர்களும் முறையானப் பயணப் பத்திரங்களைக் கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், தாங்கள் கொண்டு வந்த பொருள்களுக்கான அனுமதி பெர்மிட்டை அவர்களால் காட்ட இயலவில்லை. அந்த படகின் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒன்பது அட்டைப் பெட்டிகளில் பல்வேறு வகையான கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது என்றார் அவர்.

மேல் விசாரணைக்காக அந்த படகும் அதில் பயணம் செய்தவர்களும் சிலாங்கூர் மாநில கடல் சார் அமலாக்க நிறுவன அலுவலகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர் என்று அவர் மேலும் சொன்னார்.

 


Pengarang :