ECONOMYNATIONALTOURISM

எண்டமிக் கட்டத்திற்கு மாற்றம்- புத்துணர்ச்சி பெறுகிறது சுகாதாரச் சுற்றுலாத் துறை

கோலாலம்பூர், ஜூன் 15- உலகில் கோவிட்-19 பெருந்தொற்று தாக்கம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனினும், அந்த பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து துறைகளுக்கும் விதிக்கப்பட்ட ஏறக்குறைய அனைத்துக் கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் மீட்டுக் கொண்டுள்ளது மலேசியர்களை நிம்மதி பெருமூச்சு விடச் செய்துள்ளது.

கடந்த ஈராண்டுகளாக விதிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மலேசியாவின் பொருளாதாரத்தை ஏறக்குறைய முடங்கச் செய்து விட்டது. இதில் மோசமாகப் பாதிக்கப்பட்ட துறையாக விளங்குவது சுற்றுலாத் துறையாகும்.

நாட்டின் எல்லைகள் முன்புபோல் திறக்கப்பட்டுள்ள நிலையில் அத்துறை மீண்டும் புத்துயிர் பெற்று பழைய வேகத்துடன் செயல்படத் தொடங்கியுள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் தேதி தொடங்கி நாட்டின் எல்லைகள் திறக்கப்பட்டதானது நாடு எண்டமிக் கட்டத்தை நோக்கி நகர்வதற்கான தயார் நிலையை புலப்படுத்துவதாக உள்ளது. வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் நாட்டிற்கு வருவது இதன் வழி அதிகரித்துள்ளதோடு சுற்றுலா தொகுப்புகளுக்கும் ஆர்டர்கள் அதிகரித்துள்ளன.

இந்த அரிய வாய்ப்பினை சுற்றுலாத் துறையினரும் அத்துறையுடன் தொடர்புடைய தரப்பினரும் முறையாக பயன்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

குறிப்பாக சுகாதாரச் சுற்றுலாத் துறை கோவிட்-19 காரணமாக கடந்த ஈராண்டுகளாக எதிர்நோக்கிய இழப்பிலிருந்து மீண்டு வருவதற்கு ஏதுவாக அத்துறைக்கு புத்துயிரூட்டுவதற்கான வழிவகைகளை ஆராயப்பட வேண்டும்.

சுகாதாரச் சுற்றுலா ஆண்டாக 2020 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டிருந்த போதுதான் அந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நாட்டை கோவிட்-19 பெருந்தொற்று தாக்கியது.

சுகாதாரச்  சுற்றுலா ஆண்டில் 200 கோடி வெள்ளி வருமானத்தையும் அது சார்ந்த இதர துறைகள் வாயிலாக மேலும் 600 கோடி வெள்ளி வருமானத்தையும் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :