ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHSELANGOR

ஏடிஸ் கொசு பரவலைத் தடுக்க வீடு வீடாகச் சோதனை- கிள்ளான் நகராண்மைக் கழகம் நடவடிக்கை

ஷா ஆலம், ஜூன் 16- ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அடையாளம் கண்டு அழிப்பதற்காக கிள்ளான் நகராண்மைக் கழகம் வீடு வீடாக சோதனை மேற்கொள்ளும்.

கிள்ளான் மாவட்டத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த சோதனை நடவடிக்கை அடிக்கடி  மேற்கொள்ளப்படும் என்று நகராண்மை கழகத்தின் சுகாதாரத் துறை அதிகாரி ஜக்காரியா இஸ்மாயில் கூறினார்.

மேலும், மாவட்டத்திலுள்ள வீடமைப்புப் பகுதிகளில் மாலை நேரங்களில் புகையின் மூலம் கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

இம்மாவட்டத்திலுள்ளவர்கள் சுகாதாரத்தை பேணும் அதே வேளையில் ஏடிஸ் கொசுக்களின் பரவலிலிருந்து தங்கள் சுற்றுப்புறங்கள் விடுபட்டிருப்பதை உறுதி செய்யும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

இவ்வாண்டு தொடங்கி இதுவரை இம்மாவட்டத்தில் 2,886 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து சோதனை நடவடிக்கையை அடிக்கடி மேற்கொள்ள தாங்கள் முடிவெடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

இருபத்திரண்டாவது நோய்த் தொற்று வாரத்தில் இம்மாவட்டத்தில் 157 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் தாமான் மேரு இண்டாவில் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட இரு சம்பவங்களும் அடங்கும் என்றார் அவர்.

தற்போது நிலவி வரும் வெப்ப வானிலை ஏடிஸ் கொசுக்கள் விரைவாக வளர்பதற்கு காரணமாக உள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :