ANTARABANGSAECONOMYSUKANKINI

ஆசிய கிண்ணப் போட்டிக்கு தகுதி பெற்ற மலேசிய அணிக்கு வெகுமதி- அரசு பரிசீலனை

பாங்கி, ஜூன் 16– வரும் 2023 ஆசிய கிண்ண கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற ஹரிமாவ் மலாயா குழுவுக்கு வெகுமதி வழங்குவது மற்றும் அந்த வெற்றியைக் கொண்டாடுவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு மற்றும் மலேசிய கால்பந்து சங்கத்துடன் விரைவில் விவாதிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

அந்த வெற்றியைக் கொண்டாடுவது அல்லது குழுவினருக்கு ஏதாவது வகையில் வெகுமதி வழங்குவது குறித்து விவாதிக்கப்படும் என்று 2022 ஆம் ஆண்டிற்கான மலேசிய இளைஞர் நாடாளுமன்றக் கூட்டத்திற்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

நாம் முதல் கட்டச் சோதனையில்தான் வெற்றி கண்டுள்ளோம். ஆசிய கிண்ண கால்பந்து போட்டியில் நமக்கு பெரிய சவால் காத்திருக்கிறது. அந்த போட்டியில் நாம் சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்தாக வேண்டும் என்று அவர் கூறினார்.

மலேசிய ஆட்டக்காரர்கள் போராட்ட உணர்வை தொடர்ந்து தக்க வைத்து மலேசியாவின் நற்பெயரை அனைத்துலக நிலையில் குறிப்பாக ஆசிய அளவில் நிலைநாட்டுவார்கள் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்ற 2023 ஆசிய கிண்ண கால்பந்து போட்டியின் இ பிரிவு தகுதிச் சுற்றில் வங்காளதேசத்தை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மலேசியா அப்போட்டிக்கு தகுதி பெற்றது.


Pengarang :