ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

தாமான் கின்ராராவில் ஆற்றின் கரைகளை வலுப்படுத்தும் பணி ஆகஸ்டில் முற்றுப் பெறும்

ஷா ஆலம், ஜூன் 16- தாமான் கின்ராரா பகுதியில் வெள்ளப் பிரச்னையைக் களைவதற்காக ஆற்றின் கரைகளைப் வலுப்படுத்தும் பணி வரும் ஆகஸ்டு மாதம் முற்றுப் பெறும்.

வெள்ளத் தடுப்பு நோக்கத்திற்காக சுங்கை குயோ ஆற்றின் கரைகளை வலுப்படுத்துவது மற்றும் தடுப்பணை அமைப்பது ஆகிய இரு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

சுங்கை குயோ ஆற்றின் கரைகள் வலுவிழப்பதால் கின்ராரா கோர்ட் குடியிருப்பாளர்களுக்கு ஆபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக கரையை வலுப்படுத்தும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.

மேலும், கடுமையாக மழை பெய்யும் சமயங்களில் ஆற்று நீர் பெருக்கெடுத்து தாமான் கின்ராரா குடியிருப்பு பகுதியில் நுழைவதை தடுப்பதற்காக ஆற்றின் கரையோரம் தடுப்பணை நிர்மாணிக்கப்படுகிறது என்றார் அவர்.

சுமார் 11 லட்சம் வெள்ளி செலவிலான இவ்விரு திட்டங்களையும் கோலாலம்பூர் வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறை (ஜே.பி.எஸ்.) மேற்கொண்டு வருவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

இந்த வெள்ளத் தடுப்பு திட்டத்தை அமல்படுத்தி வரும் கோலாலம்பூர் ஜே.பி.எஸ். துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் இப்பகுதியில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :