ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

அரசின் சலுகை நீக்கத்தால் கோழி விலை கிலோ 10.00 வெள்ளியைத் தாண்டும்

மலாக்கா, ஜூன் 17 - கோழிக்கான உச்சவரம்பு சில்லறை விலைத் திட்டம் வரும் ஜூன் 30ஆம் தேதி முடிவடைவது மற்றும் கோழி வளர்ப்போருக்கான மானியம் நிறுத்தப்படுவது ஆகிய காரணங்களால் கோழியின் விலை கிலோவுக்கு 10.00 வெள்ளியைத் தாண்டும் என மலேசிய கால்நடை  சங்கங்களின் சம்மேளனம் எதிர்பார்க்கிறது.

அந்த இரு அரசாங்க சலுகைகளும் நிறுத்தப்படுவதால் கோழித் தீவனத்தின் விலை உயர்வுக்கு ஏற்ப கோழி வளர்ப்பவர்கள் சுமக்க வேண்டிய மொத்த செலவும் கிலோவிற்கு 7.00 வெள்ளியைத் தாண்டும் என்று அந்த சம்மேளனத்தின் ஆலோசகர் டத்தோ ஜெப்ரி இங் சூன் கீ கூறினார்.

தற்போது, ​​கோழியின் விலை கிலோ ஒன்றுக்கு வெ.8.90 ஆகவும், பண்ணையில் இருந்து கிடைக்கும்  கோழியின் விலை ஒரு கிலோ வெ.5.60 ஆகவும் உள்ளது. ஆனால் இப்போது எங்களிடம் ஒரு கிலோவுக்கு வெ1.40 க்கான மானியம்  மட்டுமே உள்ளது.

இன்று தீவனத்தின் மிகக் குறைந்த விலை ஒரு மூட்டை சுமார் 130.00 வெள்ளியாகும். ஒரு கிலோ தீவனம் வெ.2.60 ஆகிறது. இது சுமார் 1.7 கிலோ எடையுள்ள கோழிக்கான தீவனமாகும். இதன்படி பார்த்தால் தீவனத்தின் விலையே 4.00 வெள்ளியைத் தாண்டி விடுகிறது.  அதே நேரத்தில் நாங்கள் வாங்கும் கோழிக் குஞ்சுகள் வெ.2.30 முதல் வெ.2.40 வரை இருக்கும் என்று அவர்  செய்தியாளர்களிடம் கூறினார்.

கோழி வளர்ப்பவர்கள் கோழிக் குஞ்சுகளை வாங்குவதற்கும் தீவனம் வாங்குவதற்கும் ஆகும் செலவை மட்டுமின்றி சம்பளம், தடுப்பூசிகள் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பிற செலவுகளையும் ஏற்க வேண்டியுள்ளது என்று இங் மேலும் சொன்னார்.

அரசாங்கம், குறிப்பாக உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார  அமைச்சுடன் கலந்துரையாடல் நடத்தி உடன் கலந்துரையாடி கோழிக்கு நியாயமான  புதிய விலையை நிர்ணயம் செய்ய நம்பிக்கை கொண்டுள்ளதாக  அவர் குறிப்பிட்டார்.

Pengarang :