ECONOMYMEDIA STATEMENT

மாநில அரசின் புதிய திட்டங்களின் அறிமுகப் பயணம் நாளை அம்பாங்கில் தொடங்குகிறது

ஷா ஆலம், ஜூன் 18– புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் “ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங்“ திட்டம் நாளை அம்பாங், தாமான் கோசாஸ் திடலில் நடைபெறுகிறது.

காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் மறு சீரமைக்கப்பட்ட பெடுலி ராக்யாட் திட்டத்தை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார்.

இந்த நிகழ்வில் அவர் ரூமான் இடாமான் திட்டத்தில் வீடு வாங்கிய பத்து பேருக்கு ஒப்புதல் கடிதங்களையும் விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு மானியங்களையும் வழங்குவார்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக கலைஞர்களின் இசைப் படைப்புகள், ஏரோபிக், சமையல் போட்டி, மலர் அலங்காரம் மக்கள்  விளையாட்டு உள்ளிட்ட அங்கங்களும் இடம் பெறும்.‘

மேலும், பத்து வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறார்களுக்கான கால்பந்து போட்டியும் இங்கு நடத்தப்படவிருக்கிறது. இப்போட்டியின் வெற்றியாளர்களுக்கு வெ.30.00 முதல் வெ.500.00 வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

இதே போன்ற நிகழ்வு கோல லங்காட் பந்தாய் மோரிப்பில் இம்மாதம் 25 ஆம் தேதி நடைபெறும். அதன் பின்னர் மற்ற மாவட்டங்களுக்கும் இந்த விளக்க நிகழ்வு விரிவுபடுத்தப்படும்.

மாநில அரசின் சமூக நலத் திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலான இந்த திட்டத்தில் மாநில அரசின் 23 துணை நிறுவனங்களும் பங்கு கொண்டுள்ளன.

 


Pengarang :