ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாளை நடைபெறும் மக்கள் நலத் திட்ட அறிமுக நிகழ்வில் இடாமான் வீடுகளுக்கு பதிவு செய்ய வாய்ப்பு

ஷா ஆலம், ஜூன் 18- நாளை நடைபெறும் “ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங்“ எனப்படும் மக்கள் நலத் திட்ட அறிமுக நிகழ்வில் எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி பெசார் (ஒருங்கிணைக்கப்பட்ட) கழகத்தின் இடாமான் வீடுகளுக்கு பதிவு செய்வதற்குரிய வாய்ப்பு வழங்கப்படும்.

அம்பாங், தாமான் கோசாஸ் திடலில் நாளை காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வின் போது பெவிலியன் எம்.பி.ஐ. காட்சிக்கூடத்தில் இதற்கான பதிவை மேற்கொள்ளலாம் என்று எம்.பி.ஐ. கூறியது.

முழு வசதிகளும் உகந்த சூழலும் கொண்ட வீடுகளை பொதுமக்கள் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் மாநில அரசும் எம்.பி.ஐ. கழகமும் இந்த ரூமா இடாமான் எம்.பி.ஐ. திட்டத்தை அமல்படுத்தியுள்ளன.

ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் பயணத் திட்ட நிகழ்வில் பெவிலியன் எம்.ஐ.பி. காட்சிக்கூடத்தில் உங்கள் கனவு இல்லத்தைப் பெறுவதற்கு பதிவு செய்யுங்கள் என்று அந்த கழகம் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

ஷா ஆலம், புக்கிட் ஜெலுத்தோங், பூச்சோங், பண்டார் சவுஜானா புத்ரா, சிப்பாங் போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் 70,000 ரூமா இடாமான் வீடுகள் கட்டப்படும் என்றும் அது கூறியது.

மாநில அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தும் நோக்கிலான இந்த பயணத் தொடரை எம்.பி.ஐ. கோல லங்காட்டில் நாளை தொடக்குகிறது. இந்த நிகழ்வில் மாநில அரசின் 23 துணை நிறுவனங்கள் பங்கு கொள்கின்றன.

மாநில அரசின் திட்டங்களில் மேலும் அதிகமானோர் பயன்பெறும் வகையில் பெடுலி ராக்யாட் திட்டத்திற்கு மாற்றாக இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தை மாநில அரசு 35 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் அறிமுகப்படுத்துகிறது.

இதன் ஒரு பகுதியாக கிஸ் எனப்படும் பரிவு அன்னையர் உதவித் திட்டத்திற்கு பதிலாக பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் மக்கள் நல்வாழ்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.  இந்த மாற்றத்தின் வழி மாநில அரசிடமிருந்து உதவி பெறுவோரின் எண்ணிக்கை 25,000 லிருந்து 30,000 ஆக அதிகரிக்கும்.


Pengarang :