ECONOMYMEDIA STATEMENTSELANGOR

புக்கிட் நாகாவில் மலிவு விற்பனை- மூன்றே மணி நேரத்தில் 400 கோழிகள் விற்றுத் தீர்ந்தன

ஷா ஆலம், ஜூன் 18- இங்குள்ள கம்போங் புக்கிட் நாகா, அல்-பக்ரி பள்ளிவாசல் வளாகத்தில் இன்று நடைபெற்ற மாநில அரசின் ஏசான் மலிவு விற்பனையின் போது மூன்று மணி நேரத்தில் 400 கோழிகள் விற்றுத் தீர்ந்தன.

கோழி தவிர்த்து பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய் அதிக விற்பனையை பதிவு செய்ததாக சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) வர்த்தக பிரிவு தலைமை நிர்வாகி முகமது பாஸிர் அப்துல் லத்திப் கூறினார்.

இன்றைய விற்பனைக்காக நாங்கள் 550 கோழிகளை கொண்டு வந்தோம். நண்பகல் 12.00 மணிக்குள் 400க்கும் மேற்பட்ட கோழிகள் விற்றுத் தீர்ந்தன. இன்று விற்பனைக்கு வைக்கப்பட்ட 170 பாக்கெட் சமையல் எண்ணெய் முழுவதும் விற்றுத் தீர்ந்து விட்டது என்று அவர் சொன்னார்.

இந்த அபரிமித வரவேற்பைக் கருத்தில் கொண்டு அடுத்து நடைபெறும் மலிவு விற்பனையின் போது இந்த பொருள்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அவர் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தார்.

இன்று காலை 9.30 மணி தொடங்கி நண்பகல் 12.00 மணி வரை நீடித்த இந்த விற்பனையில் கோழி, மீன், இறைச்சி, பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கி மாநிலத்தின் 50 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட மலிவு விற்பனைத் திட்டம் மூலம் மாநிலத்தில் சுமார் 60,000 பேர் பயனடைந்தாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தார்.

பொது மக்களின் சுமையைக் குறைப்பது மற்றும் கோழி, மீன், இறைச்சி, முட்டை மற்றும் காய்கறிகள் பொது மக்களுக்கு போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த மலிவு விற்பனைத் திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியது.


Pengarang :