ECONOMYMEDIA STATEMENT

போதைப் பொருள் குற்றச்சாட்டிலிருந்து இரு ஆடவர்கள் விடுதலை

புத்ராஜெயா, ஜூன் 21- ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் 51.7 கிலோ கிராம் மெதம்பெத்தமின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக இரு ஆடவர்களுக்கு விதிக்கப்பட்ட 23 ஆண்டுச் சிறை மற்றும் 20 பிரம்படித் தண்டனையை இங்குள்ள கூட்டரசு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

உணவக பணியாளரான லீ யுவான் சியோங் (வயது 32) மற்றும் பழ வியாபாரியான போன் தியாம் லியோங் (வயது 49) ஆகிய இருவருக்கும் உயர் நீதிமன்றம் வழங்கிய தண்டனை பாதுகாப்பற்றதாக உள்ளதை கருத்தில் கொண்டு அவ்விருவரையும் குற்றச்சாட்டிலிருந்தும் தண்டனையிலிருந்தும் விடுப்பதாக மூவர் கொண்ட நீதிபதி குழுவுக்கு தலைமையேற்ற டத்தோ ஹனாப்பியா ஃபாரிகுல்லா தனது தீர்ப்பில் கூறினார்.

இது ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவாகும். மனுதாரர்களின் மேல் முறையீட்டு மனுவை பரிசீலிக்கையில் அவ்விருவருக்கும் எதிரான தண்டனை விதிப்பில் உயர் நீதிமன்ற நீதிபதி தவறிழைத்துள்ளது தெரிய வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மாலை 5.00 மணியளவில் சுங்கை பீலேக், ஜாலான் தாசேக் டெடாப் 1, பந்தாய் சிப்பாங் புத்ராவில் முறையே மெதம்பெத்தமின் போதை மாத்திரைகளை வைத்திருந்ததாக சோங் யூ சாய் (வயது 54) என்ற ஆடவரோடு லியோ மற்றும் போன் தியாம் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்க வகை செய்யும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் அவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.

எனினும், தற்காப்பு வாதத்தின் போது அவர்கள் மீதான குற்றச்சாட்டு அதே சட்டத்தின் 39ஏ(2) பிரிவுக்கு மாற்றப்பட்டது.


Pengarang :