ECONOMYNATIONALTOURISM

2022 வான் போக்குவரத்து கண்காட்சி- வருகையாளர்களின் வசதிக்காக இலவச பேருந்து சேவை- டத்தோ தெங் தகவல்

ஷா ஆலம், ஜூன் 22– வரும் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் 2022 ஆம் ஆண்டு சிலாங்கூர் வான் போக்குவரத்து கண்காட்சிக்கு வருகை புரிவோரின் வசதிக்காக இலவச பேருந்து சேவை ஏற்படுத்தித் தரப்படும்.

சுபாங், சுல்தான் அப்துல் அஜிஸ் விமான நிலையத்திலிருந்து ஸ்கைபார்க் பிராந்திய வான் போக்குவரத்து மையத்திற்கு (ஆர்.ஏ.சி.) இந்த இலவச பேருந்து சேவை வழங்கப்படும் என்று முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

இந்த இரண்டாவது கண்காட்சியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். சுபாங் விமான நிலையத்தில் வந்திருங்கும் வருகையாளர்கள் எந்த கட்டணமும் இன்றி நேரடியாக கண்காட்சி மையத்திற்கு வருவதற்கு இந்த சேவை துணை புரியும் என அவர் சொன்னார்.

இது தவிர, கடந்தாண்டில் 17,000 சதுர மீட்டராக இருந்த கண்காட்சி மையத்தின் பரப்பளவும் இவ்வாண்டு 28,000 சதுர மீட்டராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

2022 ஆம் ஆண்டு சிலாங்கூர் வான் போக்குவரத்து கண்காட்சியை இங்குள்ள ஷெரட்டோன் தங்கும் விடுதியில் இன்று தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆசியானின் வான் போக்குவரத்து மையமாக சிலாங்கூரை உருவாக்குவதற்கு மாநில அரசு திடமான நம்பிக்கையைக் கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இதுவே எங்களின் தொலைநோக்குத் திட்டமாகும். வான்  போக்குவரத்து கண்காட்சியை நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எங்களின் நோக்கத்தைப் புலப்படுத்துகின்றன.

சிலாங்கூரை வாணிகத்திற்கும் வான் போக்குவரத்துக்கும் ஏற்ற மையமாக உருவாக்கும் எங்களின் நோக்கத்தை மறுப்பதற்கில்லை என்றார் அவர்.


Pengarang :