ECONOMYSELANGORSUKANKINI

திறன்மிக்க விளையாட்டாளர்களை உருவாக்க கால்பந்து துறைக்கு ஆக்ககரமான பயிற்சி முறை தேவை

செலாயாங், ஜூன் 27- அனைத்துலக நிலையில் போட்டியிடும் ஆற்றல் கொண்ட விளையாட்டாளர்களை உருவாக்க கால்பந்து துறைக்கு ஆக்ககரமான பயிற்சி முறை தேவை.

நாட்டின் கால்பந்து துறையில் பயிற்றுநர்கள் அடிக்கடி மாறுவதைக் காண முடிகிறது. இது பயிற்சியில் முறைக்கு மாறான ஒன்று என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

2023 ஆசிய கிண்ணப் போட்டிக்கு மலேசிய அணி தேர்வானது குறித்து நாம் மகிழ்ச்சியடையலாம். ஆனால், அப்போட்டிக்கு நாம் தேர்வானது முக்கியமல்ல.

ஆசியாவின் உயரிய அந்த போட்டியில் நமது சாதனையை எவ்வாறு தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளப் போகிறோம் என்பதுதான் தற்போதைய கேள்வி என அவர் குறிப்பிட்டார்.

யூரோ 2001 போட்டியில் ஜெர்மனி அடைந்த தோல்வியை நாம் உதாரணமாக கொள்ளலாம். அந்நாடு உடனே பயிற்சியாளர்களை அதிகரித்து பயிற்சி முறையையும் சீரமைத்தது. இதன் வழி கீழ் நிலையிலுள்ள விளையாட்டாளர்கள் திறம்பட பயிற்றுவிக்கப்பட்டனர் என்று அமிருடின் சொன்னார்.

இங்குள்ள ஆர்.எச்.ஆர். தங்கும் விடுதியில் அனைத்துலக கருடா 2 போட்டிக்கான பிந்தாங் கோம்பாக் எப்.சி. குழுவின் ஜெர்சியை வெளியிடும் நிகழ்வுக்கு தலைமையேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அடிமட்ட நிலையில் உள்ள விளையாட்டாளர்களின் திறனை பரிமளிக்கச் செய்வதில் கோம்பாக் எப்.சி. குழுவின் நிர்வாகத்தினர் ஆற்றி வரும் பங்களிப்பை அந்த குழுவின் புரவலருமான அவர் பெரிதும் பாராட்டினார்.

இந்தோனேசியாவின் பாகோரில் வரும் ஜூன் 30 முதல் ஜூலை 3 வரை நடைபெறும் கருடா 2 அனைத்துலக போட்டியில் பிந்தாங் கோம்பாக் எப்.சி. குழு வெற்றி பெற தாம் வாழ்த்துவதாகவும் அவர் கூறினார்.


Pengarang :