ANTARABANGSAECONOMYSUKANKINI

சிவசங்கரி விபத்தில் சிக்கியதன் எதிரொலி- காமன்வெல்த் போட்டிக்கான பதக்க இலக்கில் மாற்றம்

புத்ரா ஜெயா, ஜூன் 28- பெர்மிங்ஹாமில் நடைபெறவிருக்கும் 2022 காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட எஸ்.சிவசங்கரி நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் காயமுற்றதைத் தொடர்ந்து அப்போட்டியில் ஏழு தங்கப்பதக்கங்களை வெல்லும் இலக்கில் மலேசிய ஒலிம்பிக் மன்றம் மாற்றம் செய்துள்ளது.

தேசிய மகளிர் முதல் நிலை ஸ்குவாஷ்  விளையாட்டாளரான சிவசங்கரி இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பின்னரே மீண்டும் களத்தில் இறங்க முடியும் என்பதால் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்டு 8 வரை நடைபெறும் பெர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியை அவர் தவற விட நேரும் என்று அப்போட்டிக்கான மலேசிய குழுவின் துணைத் தலைவர் ஜெரார்ட் மோன்தேய்ரோ கூறினார்.

சிவசங்கரிக்கு ஏற்பட்ட இந்த விபத்து எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமது பைசால் அஸூமுவுடன் நான் சிவசங்கரியைச் சென்று கண்டேன்.

அவரின் உடல் நிலை சீராக உள்ளது என்பது ஆறுதலான விஷயம். கை,கால்களை அவரால் அசைக்க முடிகிறது. மறுமொழி தரவும் அவரால் இயலுகிறது. இது நல்ல அறிகுறியாகும். பதக்க இலக்கை பொறுத்த வரை நாங்கள் அதனை மறுஆய்வு செய்வோம் என ஜெரார்ட் கூறினார்.

உலகின் 19வது நிலை ஸ்குவாஷ் வீராங்கனையான சிவசங்கரி (வயது 23) கடந்த ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை 3.46 மணியளவில் மாஜூ விரைவுச்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் தலையில் காயங்களுக்குள்ளானார்.

அவர் பயணம் செய்த புரோட்டோன் சாகா பி.எல்.எம். ரக க்கார் லோரியின் பின்புறம் மோதி தீப்பிடித்தது. அக்காரின் 90 விழுக்காட்டு பகுதி தீயில் சேதமடைந்தது.


Pengarang :