ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

சமூகப் பணிகளை மேற்கொள்ள 42 தொகுதிகளுக்கு 126,000 வெள்ளி மானியம்- பெக்காவானிஸ் வழங்கியது

கோம்பாக், ஜூன் 28- பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொள்வதற்காக மாநிலத்திலுள்ள 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 126,000 வெள்ளி மானியத்தை பெக்காவானிஸ் எனப்படும் சிலாங்கூர் மகளில் சமூக நல அமைப்பு வழங்கியுள்ளது.

திட்டங்களை அமல்படுத்துவதில் பெக்காவானிஸ் உறுப்பினர்கள் ஆற்றி வரும் அளப்பரிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த மானியம் வழங்கப்படுவதாக பெக்காவானிஸ் தலைவர் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமது கூறினார்.

இந்த நிதியைக் கொண்டு அவர்கள் விரும்பிய நிகழ்வுகளை நடத்தலாம். உதாரணத்திற்கு சுங்கை துவா தொகுதியில் முதியோர் இல்லத்தில் துப்புரவுப் பணியை மேற்கொள்ள நான் திட்டமிட்டுள்ளேன். அங்கு ஏதேனும் பொருள்களுக்கு தேவை இருப்பின் அதை வாங்கித் தருவேன் என அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் இத்திட்டம் அமல்படுத்தப்படும். மற்ற மாநில சட்டமன்றத் தொகுதிகளில் அமல்படுத்தப்படும் திட்டங்கள் பயனளிப்பதாக இருந்தால் அதனையும் நமது தொகுதிகளில் அமல் செய்வோம் என்று அவர் சொன்னார்.

பெக்காவானிஸ் ஏற்பாட்டில் நேற்று இங்கு நடைபெற்ற சுங்கை துவா சட்டமன்றத் தொகுதி நிலையிலான அன்னையர் தின விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிதி விரைவில் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் துணைவியாருமான அவர் சொன்னார்.


Pengarang :