ECONOMYSELANGOR

கிள்ளானில் சுமார் 1,000 பேர் வெள்ள நிவாரண நிதியை இன்னும் பெறவில்லை

ஷா ஆலம், ஜூன் 30- கிள்ளான் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 1,000 பேர் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் ஆயிரம் வெள்ளி வெள்ள நிவாரண நிதியை இன்னும் பெறவில்லை.

முகவரி மற்றும் கைபேசி எண்கள் முழுமையாக இல்லாத காரணத்தால் அவர்களை அடையாளம் காண முடியாத நிலை உள்ளதாக கிள்ளான் மாவட்ட அதிகாரி ஷாமான் ஜலாலுடின் கூறினார்.

விண்ணப்ப பாரங்களில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு மாவட்ட மற்றும் நில அலுவலக அதிகாரிகள் சென்ற போது சம்பந்தப்பட்டவர்களை கண்டு பிடிக்க முடியாது போனதாக அவர் சொன்னார்.

நாங்கள் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு முன்னர்  சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்றோம். முகவரி முழுமையாக இல்லாதது மற்றும் கைபேசி எண்கள் தவறாகக் குறிப்பிடப்பட்டது ஆகிய காரணங்களால் அவர்களை அடையாளம் காண இயலவில்லை என்றார் அவர்.

ஒரு சில வீடுகளை நாங்கள் அடையாளம் கண்டுபிடித்து சென்ற போது சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் வீட்டில் இல்லை. அவர்களின் வாரிசுகளிடம் அந்த உதவித் தொகையை ஒப்படைத்தோம். ஒட்டு மொத்தமாக பார்க்கையில் ஆயிரத்திற்கும்  குறைவானோர் இன்னும் பணத்தை பெறாமலிருக்கின்றனர் என அவர் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கி இதுவரை 66,000 பேர் வெள்ள உதவி நிதியைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பலர் இன்னும் மாநில அரசின் 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெறாமலிருப்பதாக கோத்த கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் அண்மையில் கூறியிருந்தார்.

அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும் அவர்கள் அந்த பணத்தைப் பெற்றுக் கொள்ள வராததோடு அவர்களைத் தொடர்பு கொள்ளவும் இயலவில்லை என்றார் அவர்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக  பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் மாநில அரசு 10 கோடி வெள்ளியை ஒதுக்கியது.


Pengarang :