ECONOMYSELANGOR

வாகன பழுதுபார்ப்பு, அலுவலக நிர்வாகத் துறைகளில் பயிற்சி பெற இளையோருக்கு அழைப்பு

ஷா ஆலம், ஜூன் 30- வாகனப் பழுதுபார்ப்பு மற்றும் அலுவலக நிர்வாகத் துறை பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க கடந்தாண்டு எஸ்.பி.எம். முடித்த மாணவர்களுக்கு  யு.பி.பி.எஸ். எனப்படும் சிலாங்கூர் தொழிலாளர் ஆக்கத் திறனளிப்பு பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

கார்ஸம் அகாடமியின்  ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் இந்த பயிற்சித் திட்டத்தில் 70 பேர் பங்கு கொள்வதற்குரிய வாய்ப்பு வழங்கப்படும் என்று அப்பிரிவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.விஜயன் கூறினார்.

இந்த பயிற்சித் திட்ட பங்கேற்பாளர்கள் பல்வேறு அனுகூலங்களைப் பெறுவதற்குரிய வாய்ப்பு உள்ளதாக கூறிய அவர், அவர்களுக்கு ஓராண்டு காலத்திற்கு தீவிர பயிற்சி வழங்கப்படும் என்றார்.

அந்த ஓராண்டு பயிற்சியின் போது அவர்கள் மூன்று மாதங்களுக்கு பாடத் திட்டப் பயிற்சியும் ஓரு மாதத்திற்கு செய்முறைப் பயிற்சியும் மேற்கொள்வர். பயிற்சியை முடித்தவர்களுக்கு மலேசிய தொழில் திறன் கழகத்தின் 3 ஆம் நிலை சான்றிதழ் வழங்கப்படும்  என அவர் குறிப்பிட்டார்.

மேலும், மாதம் 2,000 வெள்ளி சம்பளம் மற்றும் 300 வெள்ளி அலவன்சில் கார்ஸம் நிறுவன கிளைகளில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
இந்த பயிற்சித் திட்டத்திற்கான பதிவு நடவடிக்கை கிள்ளான்  ஜாலான் துங்கு கிளானாவில் உள்ள எம்.பி.கே. மினி ஆடிட்டோரியத்தில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.

இந்த பயிற்சியில் பங்கேற்பதற்கான நிபந்தனைகள் வருமாறு-

– பதினெட்டு முதல் 25 வயது வரையிலான ஆண், பெண் இருபாலரும் இதில் பங்கேற்கலாம்.

-பிடி3 மற்றும் எஸ்.பி.எம். தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

– எழுத, படிக்க மற்றும் கூட்டல் கணக்கு தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.


Pengarang :