ECONOMYMEDIA STATEMENT

தங்க முதலீட்டுத் திட்ட மோசடி- நாசி லெமாக் வணிகர் மீது குற்றச்சாட்டு

குவாந்தான், ஜூலை 5– கடந்தாண்டு செப்டம்பர் முதல் இவ்வாண்டு ஜனவரி வரை 161,073 வெள்ளியை உட்படுத்திய தங்கு முதலீட்டு திட்ட மோசடியில் ஈடுபட்டதாக நாசி லெமாக் வணிகர் ஒருவர் மீது இங்குள்ள இரு மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் 25 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

மாஜிஸ்திரேட் நுருள் ஃபர்ஹான் முகமது சுவார் முன்னிலையில் தமக்கு எதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை ஜாலான் கம்பாங்கைச் சேர்ந்த வான் நோராயினி வான் அப்துல்லா (வயது 43) மறுத்து விசாரணை கோரினார்.

கடந்தாண்டு நவம்பர் 6 ஆம் தேதி முதல் இவ்வாண்டு ஜனவரி 10 ஆம் தேதி வரை சுங்கை லெஜாப் மாஜூவில் உள்ள எம்பயர் கோல் வென்ஜர் நிறுவனத்தில் முதலீடு தொடர்பில் இரு பெண்களை நம்ப வைத்ததாக அவருக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

அதிக மதிப்பிலான தங்க ஆபரணங்களைப் பெறலாம் என்ற வான் நோராய்னியின் ஆசை வார்த்தைகளை நம்பி அப்பெண்கள் வெ. 900, வெ. 11,500 மற்றும் வெ.12,100 ஐ முதலீடு செய்ததாகவும் எனினும், 4,658 வெள்ளி மதிப்பிலான தங்க நகைகள் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டில் கூறப்பட்டது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரையிலானச் சிறை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இதனிடையே, கடந்தாண்டு  செப்டம்பர் 28 ஆம் தேதிக்கும் ஜனவரி 10 ஆம் தேதிக்கும் இடையே மேலும் மூவரை ஏமாற்றியதாக இதே சட்டத்தின் கீழ் 12 குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்கியுள்ளார்.


Pengarang :