ECONOMYMEDIA STATEMENT

நால்வரைப் பலி கொண்ட விபத்து- டிரெய்லர் ஓட்டுநருக்கு 13 குற்றப்பதிவுகள்

ஈப்போ, ஜூலை 14- வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 277.1 வது கிலோ மீட்டரின் தெற்கு தடத்தில் நேற்று மாலை நிகழ்ந்த மரண விபத்தில் சம்பந்தப்பட்ட டிரெய்லர் லோரி ஓட்டுநர் போக்குவரத்து குற்றங்களுக்காக 13 சம்மன்களைக் கொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 2008 முதல் கடந்தாண்டு வரையிலான காலக்கட்டத்தில் 34 வயதுடைய அந்த ஓட்டுநர் இந்த சம்மன்களைப் பெற்றுள்ளதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ மியோர் ஃபாரிடாலாத்தாரஷ் வாகிட் கூறினார்.

அந்த குற்றப் பதிவுகளில் மூன்று சாலை விபத்துகள் தொடர்பானவையாகும் எனக் கூறிய அவர், ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது தொடர்பில் 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் அவ்வாடவரைத் தாங்கள் விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

எனினும், அவ்வாடவர் மீது மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையில் அவர் போதைப் பொருளை பயன்படுத்திய நிலையில் வாகனத்தைச் செலுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

இந்த விபத்து தொடர்பில் நேற்று மாலை 2.45 மணியளவில் எங்களுக்கு தகவல் கிடைத்தது. பொருள்கள் ஏற்றப்படாத அந்த லோரி தைப்பிங்கிலிருந்து புக்கிட் பெருந்தோங் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது முன்னாள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணம் செய்து கொண்டிருந்த காரை மோதியது தொடக்க கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் சொன்னார்.

இந்த மோதலின் விளைவாக அந்த லோரியும் காரும் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த மேலும் ஐந்து வாகனங்களை மோதித் தள்ளின. இச்சம்பவத்தில் அந்த காரில் இருந்து நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற வாகனங்களில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார்.


Pengarang :