ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

நீர் தூய்மைக்கேட்டைத் தடுக்க முக்கிய இடங்களில் டிரோன் சாதனம் மூலம் கண்காணிப்பு

ஷா ஆலம், ஜூலை 14- நீர் தூய்மைக்கேடு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள  அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட டிரோன் சாதனத்தை லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் பயன்படுத்தவுள்ளது.

ஏரேடைன் ஜியோபிஷல் சென்.பெர்ஹாட் எனும் நிறுவனத்தால் கையாளப்படும் இந்த டிரோன் சாதனம் சுங்கை சிலாங்கூர், சுங்கை லங்காட் மற்றும் சுங்கை செமினி தாழ் வடிநிலப் பகுதிகளை உள்ளடக்கிய 31 இடங்களில் பகல் மற்றும் இரவு வேளைகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் என்று அந்த வாரியம் தெரிவித்தது.

டி.ஜே.ஐ. மெட்ரைஸ் 300 ஆர்.டி.கே. எனும் அந்த டிரோன் சாதனம் கண்காணிப்பு இடங்களில் காணப்படும் மாற்றங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை கண்டு பிடிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

மஞ்சள் அல்லது சிவப்பு குறியீட்டு அளவு பாதிப்பு ஆறுகளுக்கு ஏற்படும் பட்சத்தில் ஓட்டுநர் இல்லா வாகனங்களைப் பயன்படுத்தி கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என்று அவ்வாரியம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

சிலாங்கூரிலுள்ள ஆறுகளில் ஏற்படும் தூய்மைக்கேடு மற்றும் அத்துமீறல்களைக் கண்டறிவதற்காக கடந்த 2020 நவம்பர் மாதம் முதல் டிரோன் சாதனத்தை லுவாஸ் அதிரடி கண்காணிப்பு குழு பயன்படுத்தி வருகிறது.


Pengarang :