ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

‘ஓப்ஸ் ஆயர் ராயா‘ நடவடிக்கையில் 204 தொழிலியல் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை

புத்ரா ஜெயா, ஜூலை 14– கடந்த ஜூலை முதல் தேதி தொடங்கி 7 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட தொழிலியல் மையங்களுக்கு எதிரான ‘ஓப்ஸ் ஆயர் ராயா‘ நடவடிக்கையின் போது 204 சட்ட நடவடிக்கைகளை சுற்றுச்சூழல் இலாகா மேற்கொண்டது.

அந்நிறுவனங்கள் மீது 1974 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரச் சட்டத்தின் (சட்டம் 127) கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சுற்றுச்சூழல் துறை தலைமை இயக்குநர் வான் அப்துல் லத்திப் வான் ஜாபர் கூறினார்.

எஃகு தயாரிப்பு, மின்னியல் துறை, காதிதம், பிளாஸ்டிக், கனிமப் பொருள், சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு துறைகள் மீது இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது 252,000 வெள்ளி மதிப்புள்ள 126 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டதோடு விசாரணை அறிக்கை தயாரிப்பதற்காக 71 உத்தரவு அறிக்கைகள் பிறப்பிக்கப்பட்டு நான்கு உபகரண பறிமுதல் ஆணையும் வெளியிடப்பட்டது என்றார் அவர்.

அந்நிறுவனங்கள் புரிந்த பெரும்பாலான குற்றங்களில் 2005 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி நிர்ணயிக்கப்பட்ட இரசாயனக் கழிவுகளை முறையாக நிர்வகிக்காததும் அடங்கும் என அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

இந்த சோதனை நடவடிக்கையில் 235 சுற்றுச்சூழல் உறுப்பினர்களை உள்ளடக்கிய 86 அமலாக்க குழுக்களோடு மாநில மற்றும் மத்திய அரசின் அமலாக்கத் துறையினரும் பங்கு கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :