ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவீர்- மாற்றுத் திறனாளிகளுக்கு வேண்டுகோள்

கோலாலம்பூர், ஜூலை 16- பொது போக்குவரத்து சேவையை அதிகம் பயன்படுத்தும்படி மாற்றுத் திறனாளிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் அத்தரப்பினருக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கூடிய வாய்ப்பு சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு ஏற்படும் என்று சென்ட்ரல் மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் டத்தோ ராஸ் அடிபா ராட்ஸி கூறினார்.
மாற்றுத் திறனாளிகள் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தும் பட்சத்தில் தங்களுக்கு எத்தகைய வசதிகள் தேவை என்பதை சம்பந்தப்பட்டத் தரப்பினரிடம் அவர்கள் எடுத்துரைப்பதற்குரிய வாய்ப்பு கிட்டும் என அவர் சொன்னார்.
ஆகவே, மாற்றுத் திறனாளிகள் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும். மேம்படுத்தப்பட வேண்டிய விஷயங்கள் யாவை என்பதை இதன் மூலம் அவர்கள் அறிந்து கொள்ள இயலும் என்றார் அவர்.
நேற்று இங்குள்ள கம்போங் பத்து மற்றும் ஸ்ரீ டாமன்சாரா எம்.ஆர்.டி. இரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
பொது போக்குவரத்து பகுதிகளில் லிப்ட் வசதி, பார்வையற்றவர்களுக்கான பிரத்தியேக நடைபாதை, சக்கர நாற்காலி பயன்படுத்துவோரின் வசதிக்காக தானியங்கி கதவு முறை, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு கார் நிறுத்துமிடம் போன்ற வசதிகள் குறித்த தகவல்கள் மாற்றுத் திறனாளிகள் மத்தியில் பரப்பப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :