ECONOMYMEDIA STATEMENT

பதினோரு வயது மகளை கொலை செய்ததாக செண்பகவள்ளி மீது குற்றச்சாட்டு

பத்து பகாட், ஜூலை 21– யோங் பெங், தாமான் புக்கிட் டிரோப்பிக்காவிலுள்ள வீட்டில் தனது 11 வயது மகளைப் படுகொலை செய்ததாக அவரின் தாயார் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப் பட்டது.

முப்பது நான்கு வயதுடைய செண்பகவள்ளி என்ற அந்த மாதுவுக்கு எதிரான குற்றச்சாட்டு மாஜிஸ்திரேட் நுராஸிடா ஏ ரஹ்மான் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

இந்த கொலை வழக்கு உயர்நீதிமன்ற அதிகார வரம்பிற்குட்பட்டது என்பதால் குற்றஞ்சாட்டப் பட்டவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

இம்மாதம் 14 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 4.45 மணியளவில் யோங் பெங், தாமான் புக்கிட் டிரோப்பிக்காவிலுள்ள வீட்டில் எம். மகாலட்சுமி (வயது 11) என்ற தனது மகளைப் படுகொலை செய்ததாக அவர் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளார்.

குற்றவாளி என நிரூபிக்கப் பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்க வகை  செய்யும் குற்றவியல் சட்டத்தின்  302வது பிரிவின் கீழ் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

அரசுத் தரப்பில் துணை பப்ளிக் புரோசிகியூட்டர் நுர் இஸ்ஸாத்தி ரஸ்மான் வழக்கை நடத்தும் வேளையில் செண்பகவள்ளியைப் பிரதிநிதித்து யாரும் ஆஜராகவில்லை.

சவப் பரிசோதனை அறிக்கை மற்றும் இரசாயன அறிக்கையைப் பெறுவதற்கு ஏதுவாக இந்த வழக்கின் மறு விசாரணையை நுராஸிடா வரும் செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

கழுத்து நெறிக்கப் பட்டதற்கான அறிகுறி மற்றும் நெற்றியில் காயங்களுடன் அந்த சிறுமி தனது வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.


Pengarang :