ECONOMYMEDIA STATEMENT

பாகிஸ்தானிய ஆடவர் படுகொலை- குமார ராவ், ரமேஷ் மீது குற்றச்சாட்டு

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 26– இம்மாத தொடக்கத்தில் கிளானா ஜெயாவிலுள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பாகிஸ்தானிய ஆடவரை படுகொலை செய்ததாக இரு ஆடவர்கள் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இம்மாதம் 11 ஆம் தேதி இரவு 8.48 மணியளவில் ஜாலான் எஸ்.எஸ்.7/26 கிளானா ஜெயா எனும் முகவரியிலுள்ள ஜெனித் ரெசிடன்ஸ் கார்ப்பரேட் பார்க் பில்டிங்கில் காடீர் முகமது (வயது 35) என்ற ஆடவரை படுகொலை செய்த குற்றச்சாட்டை எஸ்.குமார ராவ் (வயது 55) மற்றும் ஆர். ரமேஷ் (வயது 45) ஆகியோர் எதிர்நோக்கியுள்ளனர்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மாஜிஸ்திரேட் நுர்ஷகிரா அப்துல் சலீம் முன்னிலையில் அவர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற அதிகார வரம்பிற்குட்பட்டது என்பதால் அவ்விருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மாஜிஸ்திரேட் வரும் ஆகஸ்டு 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அரசுத் தரப்பில் நோர்ஃபஹானிம் வழக்கை நடத்தும் வேளையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் யாரும் ஆஜராகவில்லை.


Pengarang :