ECONOMYNATIONAL

சம்பளத்தை உயர்த்துங்கள்! இல்லையேல் மறியலில் ஈடுபடுவோம்- கியூபெக்ஸ் எச்சரிக்கை

ஷா ஆலம், ஜூலை 28- நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் தவறினால் சாலை மறியலில் தாங்கள் ஈடுபடப் போவதாகவும் அரசு ஊழியர்கள் தொழிற்சங்கமான கியூபெக்ஸ் எச்சரித்துள்ளது.

கிரேட் 19 பிரிவு ஊழியர்களின் சம்பளம் கிரேட் 29க்கு உயர்த்தப்பட வேண்டும் என்ற தங்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு புத்ரா ஜெயா செவிசாய்க்காமல் இருப்பதால் இந்நடவடிக்கையை தாங்கள் மேற்கொள்வதாக கியூபெக்ஸ் தலைவர் அட்னான் மாட் கூறியதாக ஃப்ரி மலேசிய டுடே இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் அவர்களின் சம்பளம் மறு ஆய்வு செய்யப்படாவிட்டால் அரசு ஊழியர்களுடன் இணைந்து புத்ரா ஜெயாவில் மறியலில் ஈடுபட கியூபெக்ஸ் தயாராக உள்ளது என அவர் சொன்னார்.

நடப்பு சம்பள கட்டமைப்பு கடந்த 2002 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டதாக கூறிய அவர், நடப்புச் சூழலுக்கேற்ப அச்சம்பள முறை மறுஆய்வு செய்யப்படுவது அவசியம் என்றார்.

விலைவாசி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை அங்கீகரிக்கும்படி கியூபெக்ஸ் அரசாங்கத்தை கடந்த வாரம் வலியுறுத்தியிருந்தது.

தேர்தலுக்கு முன்னர் விலைவாசி குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் தாங்கள் இந்த மறியலை நடத்தப்போவதாக அட்னான் கூறினார்.


Pengarang :