ECONOMYSELANGOR

வான் போக்குவரத்து தொழில்துறை மையத்தை உருவாக்க சிலாங்கூர்-நெகிரி செம்பிலான் திட்டம்

ஷா ஆலம், ஜூலை 28– சிலாங்கூர்-நெகிரி செம்பிலான் எல்லையில் வான் போக்குவரத்து தொழில்துறை மையத்தை எதிர்காலத்தில் உருவாக்குவது தொடர்பில் அம்மாநிலத்துடன் சிலாங்கூர் அரசு ஒத்துழைப்பை நல்குவதற்கான சாத்தியம் உள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் இதற்கு முன்னர் இரு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கிடையே அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து (கே.எல்.ஐ.ஏ.) வெகு தொலைவில் இருக்கும் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் நடவடிக்கை மையத்துடன் (எம்.ஆர்.ஒ.) இணைப்பை ஏற்படுத்துவது உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அவர் சொன்னார்.

இந்த கூட்டுத் திட்டம் தொடர்பில் நானும் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டோம். எனினும் இதன் தொடர்பில் தீவிர விவாதம் எதுவும் நடைபெறவில்லை என்று அவர் தெரிவித்தார்.

எனது இந்த கருத்துக்கு ஆக்ககரமான அடித்தளம் உள்ளது. எனென்றால், நெகிரி செம்பிலானில் நிலத்தின் விலை குறைவு என்பதோடு மாநிலத்தின் எல்லையில் தொழிற்சாலையை நிர்மாணிப்பது சிக்கனமானது என்று அவர் கூறினார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று தாமான் டெம்ப்ளர் உறுப்பினர் முகமது சானி ஹம்சான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

இதனிடையே, கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் வான் போக்குவரத்து தொழில்துறைக்கு மீண்டும் உயிரூட்டுவது குறித்து சிலாங்கூர் வான் போக்குவரத்து தொழில்துறை ஒருங்கிணைப்பு அலுவலகம் பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :