ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வட சிலாங்கூர் சுற்றுலா மேம்பாடு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை பாதிக்காது

ஷா ஆலம் ஆக 1- சிலாங்கூரின் வட பகுதிக்கான சுற்றுலா மேம்பாடு தாமான் ஆலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை அந்தஸ்தைப் பாதிக்காது என்று சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

மாறாக, சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதற்கும் வட்டார பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டுவதற்கும் ஏதுவாக அனைத்துலக தரத்திலான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை கட்டுவதற்கு நிலங்களைப் பயன்படுத்திக் கொள்ள பெர்மிட்டுகள் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

கோல சிலாங்கூர் மற்றும் சிகிஞ்சானில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் இல்லை. சுற்றுப்பயணிகள் பெட்டாலிங் ஜெயா, கோலாலம்பூர் போன்ற பகுதிகளில் தங்க வேண்டிய சூழல் உள்ளதால் அந்த வட்டாரத்தின் பொருளாதாரம் எந்த மேம்பாடும் காணமுடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

ஐந்து நட்சத்திர  ஹோட்டல்களைக் கட்டுவதற்கு சில நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன. ஆகவே, அவர்களுக்கு நிலத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான பெர்மிட்டுகள் வழங்கப்படும். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் நில அந்தஸ்தை மாற்ற மாட்டோம் என்பதோடு இந்த மேம்பாட்டு திட்டம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில் இன்று கோல சிலாங்கூர் வட்டாரத்தின் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து புக்கிட் மெலாவத்தி உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி  எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

மேம்பாட்டு நோக்கங்களுக்காக நிலத்தைப் பயன்படுத்திக் கொள்ள பெர்மிட் வழங்கும் நடைமுறை சிலாங்கூரில் மட்டுமின்றி கெடா மாநிலத்தின் லங்காவி, பகாங் மாநிலத்தின் ரொம்பின், சரவா மாநிலத்தின் பாக்குட் ஆகிய பகுதிகளிலும்  அமல்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :