ECONOMYMEDIA STATEMENT

இலகு ரக விமான விபத்து- பொது வான் போக்குவரத்து வாரியம் விசாரணை

ஈப்போ, ஆக 2- இங்குள்ள மேடான் கோப்பெங், சுங்கை ரோக்காம், ஜாலான் நஸ்ரின் ஷாவில் இலகு ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து மலேசிய வான் பொது வான் போக்குவரத்து வாரியம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

விபத்து நிகழ்ந்த பகுதியில் யாரும் அத்துமீறி நுழையாதிருப்பதை உறுதி செய்ய தமது தரப்பினர் இரவு முழுவதும் அங்கு காவல் பணியில் ஈடுபட்டதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ மியோர் பாரிடாலத்ராஷ் வாஹிட் கூறினார்.

பொது வான் போக்குவரத்து வாரிய உறுப்பினர்கள் அங்கு நேற்று முதல் சோதனை மேற்கொண்டு வரும் வேளையில் போலீசார் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அவர் சொன்னார்.

இங்கு இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் சுமார் 400,000 வெள்ளி மதிப்புள்ள 30 மீட்பு படகுகளை மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ சஹரானி முகமதுவிடமிருந்து பெற்றுக் கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நேற்றிரவு 8.00 மணியளவில் நிகழ்ந்த இந்த விமான விபத்தில் செமினியைச் சேர்ந்த ஃபாஜிம் ஜூபா முஸ்தாபா காமால் (வயது 52 உயிரிழந்த வேளையில் கோலாலம்பூர் டாமன்சாராவைச் சேர்ந்த முகமது டின் பிக்ரி ஜைனால் அபிடின் (வயது 62) காயங்களுக்குள்ளானார்.

விமானப் பயிற்றுநர்களான அவ்விருவரும் அருகிலுள்ள விமானப் பயிற்சிப் பள்ளியிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.


Pengarang :