ECONOMYMEDIA STATEMENT

25 அந்நிய நாட்டினரை கடத்தி வந்த பதின்ம வயது ஆடவன் கைது

கோலாலம்பூர், ஆக 4-டோயோட்டா வெல்ஃபயர் பல்நோக்கு வாகனத்தை
பயன்படுத்தி 25 சட்டவிரோத குடியேறிகளை கடத்திய சந்தேகத்தின் பேரில் 17 வயது ஆடவன் நேற்று இங்குள்ள ஜாலான் செலின்சிங்கில் கைது செய்யப்பட்டான்.

நேற்று மதியம் 12.05 மணியளவில், ஜாலான் மஞ்சோய் 3, தாமான் ஸ்ரீ கூச்சிங் பகுதியில்  சந்தேகத்திற்கிடமான முறையில் வாகனம் ஒன்று செல்வதைக் போலீசார் கண்டதாக செந்துல் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி பே மோ எங் லாய் கூறினார்.

வாகனத்தை நிறுத்தும்படி போலீசார் இட்ட உத்தரவை மீறிய அந்த பதின்ம வயது ஆடவன், அங்கிருந்து தப்ப முயன்ற போது அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து  மூன்று கார்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக அவர் சொன்னார்.

அந்த ஆடவன்  அங்கிருந்து தப்பியோடிய வேளையில் அவ்வாகனத்தை சோதனையிட்ட போலீசார், அடையாளப்  பத்திரம் ஏதும் இல்லாத 15 முதல் 39 வயதுக்குட்பட்ட 19 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் அடங்கிய வெளிநாட்டவர்கள் அதில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்.

அந்த பதின்ம வயது ஆடவனும் அவனுடன் தப்பியோடிய அவனது சகாவும்  அந்த அந்நிய நாட்டினரிடமிருந்து தலா 6,000 வெள்ளி தொகையைப் பெற்றுக்  கொண்டு அவர்களை கிளந்தானில் இருந்து கோலாலம்பூருக்குக் கொண்டு வந்தது விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட ஆடவன் பள்ளிக்குச் செல்லவில்லை என்பதும் ஓட்டுநர் உரிமம் இல்லாததும் சோதனையில் கண்டறியப்பட்டது, அதே நேரத்தில் வாகனம் தவறான பதிவு எண்ணைக் கொண்டிருந்தது. விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் அனைவரும்  நேற்று தொடங்கி தடுப்புக் காவலில் வைக்கப்படுவதாக  பே கூறினார்.


Pengarang :