ECONOMYMEDIA STATEMENT

வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பல் முறியடிப்பு 

சிப்பாங், ஆக 4- வேலை வாங்கித் தருவதாக பொது மக்களிடம் கூறி சுமார் 843,996 வெள்ளி மோசடி செய்த கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர்.

இம்மாதம் 2 ஆம் தேதி சைபர் ஜெயாவிலுள்ள குடியிருப்பு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 17 முதல் 32 வயது வரையிலான அந்நிய பிரஜை ஒருவர் உள்பட ஐவர் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து ஐந்து மடிக்கணினிகள், ஐந்து கைபேசிகள் கைப்பற்றப்பட்டதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் கமாருள் அஸ்ரான் வான் யூசுப் கூறினார்.

இந்த கும்பல் கடந்த சில மாதங்களாக இங்கு செயல்பட்டு வந்ததாக இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் கமிஷன் தொகையுடன் கூடிய விற்பனை முகவராக ஆகும்படி இத்திட்டத்தில் பங்கேற்பவர்களை அக்கும்பல் கேட்டுக் கொண்டதாக அவர் சொன்னார்.

வேலை வாய்ப்பு குறித்த விளம்பரங்களை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் அக்கும்பல் வெளியிடுவது வழக்கம். வேலைக்கு விண்ணப்பிப்பவர்களிடம் தாங்களாகவே உருவாக்கிய இணைய நிறுவனத்தின் பொருள்களை விற்கும் பணியை அவர்களுக்கு வழங்கும்.

விற்கப்படும் பொருள்களுக்கு பத்து விழுக்காடு வரை கமிஷன் தரப்படும் என அக்கும்பல் ஆசை வார்த்தை கூறியிருந்த போதிலும் விற்பனைக்கான கமிஷன் தொகை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படாததோடு தாங்கள் ஆர்டர் செய்த பொருள்கள் கிடைக்கவில்லை என வாடிக்கையாளர்களிடமிருந்து புகாரும் வரத் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :