ECONOMYMEDIA STATEMENT

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் தலைமறைவு- குத்தகைப் பணியாளர்களுக்கு தொடர்பில்லை

ஷா ஆலம், ஆக 5- டிவி 3 தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஜலினா ஷஹாரா அஸ்மான் காணாமல் போனதற்கும் இங்குள்ள செக்சன் 3இல் அமைந்துள்ள அவரது வீட்டை புனரமைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பணியாளர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

அந்த ஊழியர்களிடம் இரு வாரங்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தின் வழி இந்த உண்மை கண்டறியப்பட்டதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் அந்த வீட்டை ஜலினா வாங்கியதைத் தொடர்ந்து குத்தகையாளர் மற்றும் அவரின் இரு ஊழியர்கள் அடங்கிய அம்மூவரும் கடந்த 2019 ஆம் ஆண்டில் அங்கு சீரமைப்பு பணியை மேற்கொள்ளத் தொடங்கியதாக அவர் சொன்னார்.

மொத்தம் 320,000 லட்சம் வெள்ளி செலவிலான அந்த சீரமைப்பு பணி கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டது. இப்பணிக்கு முன்பணமாக 260,000 வெள்ளியை இரு கட்டங்களாக அவர் வழங்கியிருந்தார்.

எனினும், சீரமைப்பு பணிகள் 60 விழுக்காடு பூர்த்தியான நிலையில் பணப் பற்றாக்குறை காரணமாக அப்பணிகளை ஜலினா நிறுத்தி விட்டார் என்று மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

ஜலினா காணாமல் போனது தொடர்பில் இதுவரை 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த மாதம் 28 ஆம் தேதி அந்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஒரு மடிக்கணினி மற்றும் சில ஆவணங்களை சோதனைக்காக தாங்கள் கைப்பற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :