ECONOMYMEDIA STATEMENT

ஐந்து வயது சிறுமி சித்திரவதை- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது குற்றச்சாட்டு

கோல பிலா, ஆக 8– ஐந்து வயது நிரம்பிய சிறுமியை சித்திரவதை செய்த தாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இந்திய தம்பதியர் மற்றும் அவர்களின் மகள் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை ஆர். குணசீலன் (வயது 42), அவரின் மனைவி கே.நாகம்மாள் (வயது 41) மற்றும் மகள் ஜி.நிஷா (வயது 21) ஆகியோர் மறுத்து விசாரணை கோரினர்.

கடந்த மாதம் அச்சிறுமியை பிரம்பால் அடித்தும், உதைத்தும் சுடுநீர் ஊற்றியும் கொடுமைப்படுத்தியதாக அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக அச்சிறுமியின் நெஞ்சு, முதுகு, இரு கால்கள், தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 15 ஆம் தேதிக்கும் 19 ஆம் தேதிக்கும் இடையே பண்டார் ஸ்ரீ ஜெம்புல், தாமான் ஸ்ரீ மாஹ்சானில் உள்ள வீடொன்றில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 50,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது 20 ஆண்டு வரையிலானச் சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)(ஏ) பிரிவு மற்றும் அதே சட்டத்தின் 34 பிரிவு ஆகியவற்றின் கீழ் அம்மூவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

அரசுத் தரப்பில் இந்த வழக்கை நடத்திய துணை பப்ளிக் புரோசிகியூட்டர் முகமது அமிருள் நோர் ஹஷிமி, குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கும்  ஜாமீன் வழங்கக்கூடாது என்று நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

எனினும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரணையின் போது போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு நல்கியதோடு குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் அடுத்த மாதம் உயர்கல்விக் கூடத்தில் படிப்பை தொடரவிருப்பதால் அவர்களை குறைந்த பட்ச ஜாமீன் தொகையில் விடுவிக்கும்படி எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களான ஹரேஷ் மகாதேவன் மற்றும் ரம்சானி இட்ரிஸ் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டனர்.

அம்மூவரையும் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 5,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி நோர்மா இஸ்மாயில் இந்த வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்டு 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Pengarang :