ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சோதனையிலிருந்து தப்ப நான்காவது மாடியிலிருந்து குதித்த இந்தோ. ஆடவர் கைது

காஜாங், ஆக 9- குடிநுழைவுத் துறையின் சோதனையிலிருந்து தப்புவதற்காக நான்காவது மாடியிலிருந்து தரையில் குதித்த இந்தோனேசிய கட்டுமான குத்தகையாளர் ஒருவர் காயங்களுடன் அமலாக்கத் துறையினரிடம் சிக்கினார்.

இச்சம்பவம் நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் ஜாலான் ரெக்கோ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் குத்திப் நடவடிக்கையின் போது நிகழ்ந்தது.

நான்காவது மாடியிலிருந்து குதித்த அந்த ஆடவர் இரண்டாவது மாடி கூரையில் சிக்கி தரையில் விழுந்தார். விழுந்த வேகத்தில் அருகிலுள்ள புதருக்குள் ஓடி ஒளிய முயன்றார். எனினும் இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓட முடியாத அவரை அதிகாரிகள் வளைத்துப்  பிடித்தனர்.

தனது கடப்பிதழ் கடந்தாண்டு டிசம்பர் மாதம் காலாவதியான நிலையில் அதிகாரிகளிடம் பிடிபடுவோம் என்ற அச்சத்தில் 27 வயதுடைய அந்த இந்தோனேசிய ஆடவர் இந்த விபரீத முயற்சியில் இறங்கியுள்ளார்.

ஜாலான் ரெக்கோ பகுதியிலுள்ள 134 குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 173 அந்நிய நாட்டினரை குடிநுழைவுத் துறையினர் கைது செய்தனர்.

இந்த நடவடிக்கையில் 115 மியன்மார் நாட்டினர், 33 இந்தோனேசியர்கள், 9 நேப்பாள நாட்டினர், நான்கு இலங்கையர்கள், 13 வங்காளதேசிகள் மற்றும் ஒரு இந்திய பிரஜை ஆகியோர் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ கைருள் ஸைமி டாவுட் கூறினார்.


Pengarang :