ECONOMYNATIONALWANITA & KEBAJIKAN

2022 ஆம் ஆண்டு இல்லத்தரசிகள் சமூக பாதுகாப்பு சட்ட மசோதா மேலவையில் நிறைவேற்றப்பட்டது

கோலாலம்பூர், ஆக 10- இல்லத்தரசிகள் சமூக பாதுகாப்பு சட்ட மசோதா 2022 நேற்று மேலவையில் நிறைவேற்றப்பட்டது.

இல்லத்தரசிகள் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கணவர்மார்கள் தங்கள் துணைவியருக்கு சந்தா பங்களிப்பைச் செலுத்துவதை உறுதி செய்வதற்காக மனித வள அமைச்சும் சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதன் துணையமைச்சர் டத்தோ அவாங் ஹஷிம் கூறினார்.

மனைவிமார்களுக்கு சமூக பாதுகாப்பு சந்தா செலுத்தும் கணவர்களுக்கு வரிவிலக்களிப்பது, அந்த சந்தாவுக்கு இணையான தொகையை அரசாங்கம் போன்ற இதர தரப்பினர் ஏற்றுக் கொள்வது போன்றவையும் அந்த ஊக்குவிப்புச் சலுகைகளில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

எனினும், பொருளாதார ரீதியில் ஏற்படக்கூடிய விளைவுகளை தாங்கள் ஆராயும் அதே வேளையில் இதன் தொடர்பில் எழக்கூடிய கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்காக நுட்பக் குழு ஒன்று அமைக்கப்படும் என்றார் அவர்.

மேலவையில் நேற்று 2022 இல்லத்தரசிகள் சமூக பாதுகாப்பு சட்ட மசோதா மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த இல்லத்தரசிகள் சமூக பாதுகாப்புத் திட்டத்தில் கணவர்மார்கள் உரிய பங்களிப்பை வழங்குவதை உறுதி செய்வதற்காக சொச்சோ வாயிலாக பல்வேறு பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :