ECONOMYMEDIA STATEMENT

பூலாவ் ரேடாங் கடல் பகுதியில் படகு கவிழ்ந்தது- மூன்று மீனவர்கள் நீரில் மூழ்கி மரணம்

கோல திரங்கானு, ஆக 11– பூலாவ் ரெடாங் கடல் பகுதியில் கடந்த திங்கள் கிழமை மீன்பிடி படகொன்று கவிழ்ந்த சம்பவத்தில் மூவர் நீரில் மூழ்கி மாண்டனர்.

அந்த மூவரின் சடலங்களை மீட்புப் பணியாளர்களோடு சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் நேற்று காலை 11.00 மற்றும் பிற்பகல் 1.30 மணிக்கு இடையே கண்டு பிடித்ததாக திரங்கானு மாநில கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் இயக்குநர் கேப்டன் முகமது சுஃபி முகமது ரம்லி கூறினார்.

அந்த மூவரின் உடல்கள் 1.7 முதல் 1.9 கடல் மைல் பகுதியின் வெவ்வேறு இடங்களில் கண்டு பிடிக்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.

கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்த 48 முதல் 50 வயதான அம்மூவரே இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களாவர் என அவர் குறிப்பிட்டார்.

எனினும், அந்த படகு விபத்தில் முகமது கமாருடின் யுடி (வயது 31) என்ற ஆடவர் மீட்கப்பட்ட வேளையில் மேலும் இருவரைக் காணவில்லை என்று அவர் தெரிவித்தார்.

காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும் பணியில் கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் படகு, போம்பெர்டியர் சிஎல்415 ரக விமானம் மற்றும் பெர்க்காசா 1234 படகு ஆகியவற்றோடு பத்து மீனவப் படகுகளும் ஈடுபட்டு வருவதாக அவர் சொன்னார்.


Pengarang :