ECONOMYMEDIA STATEMENT

மலாக்கா, கிள்ளான் பள்ளத்தாக்கில் செயல்பட்டு வந்த கும்பலைச் சேர்ந்த மூவர் கைது

கோலாலம்பூர், ஆக 11- கடைகளில் புகுந்து கொள்ளையிடும் கும்பலைச் சேர்ந்த மூன்று ஆசாமிகள் ஷா ஆலமில் போலீசார் மேற்கொண்ட இருவேறு அதிரடி நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டனர்.

கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் மலாக்காவில் நான்கு கடைகளில்  இக்கும்பல் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது பாரூக் எஷாக் கூறினார்.

ஜாலான் ஏ.டபள்யு.எஃப். வாட்டர்ஃப்ரோண்ட் சாலையிலுள்ள கார் பழுதுபார்ப்பு மையம் ஒன்றில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் பேரில் 30 வயது மதிக்கத்தக்க மூன்று ஆடவர்களை தாங்கள் கைது செய்ததாக அவர் சொன்னார்.

கடந்த 5 ஆம் தேதி நிகழ்ந்த இக்கொள்ளைச் சம்பவத்தில் அந்த கார் பழுதுபார்ப்பு மைய உரிமையாளருக்கு  சுமார் 30,000 வெள்ளி வரை இழப்பு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த மூன்று நபர்களையும் கைது செய்ததன் வழி அம்பாங் ஜெயா, சுபாங், சுங்கை பூலோ மற்றும் மலாக்கா மாநிலத்தின் அலோர் காஜா ஆகிய இடங்களில் நிகழ்ந்த நான்கு கொள்ளைச் சம்பவங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றார் அவர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து, களவாடப்பட்டதாக நம்பப்படும் பல்வேறு பொருள்கள் மீட்கப்பட்டதாக கூறிய அவர், அவர்கள் அனைவரும் விசாரணைக்காக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

கைது செய்யப்பட்ட ஆடவர்களில் இருவர் மீது ஒன்பது பழைய குற்றப்பதிவுகள் உள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :