ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சுங்கத் துறையின் சோதனையில் வெ.18 லட்சம் கடத்தல் சிகிரெட், மதுபானங்கள் பறிமுதல்

பெட்டாலிங் ஜெயா, ஆக 15- மலேசிய சுங்கத் துறையின் மத்திய மண்டலம் கடந்த மே முதல் ஜூலை வரை மேற்கொண்ட ஓப்ஸ் கொண்ட்ராபிரான் 1 மற்றும் 2 நடவடிக்கைகளில் 18 லட்சத்து 1 ஆயிரத்து 20 வெள்ளி மதிப்புள் கடத்தல் சிகிரெட், மதுபானங்கள் மற்றும் ஸாம் ஸாம் நீர் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டன.

வரி ஏய்ப்பு செய்ய முயன்றது, கடத்தல் சிகிரெட், மதுபானங்களை சேமித்து வைத்தது, மற்றும் நான்கு கொள்கலன்களில் கடத்த முயன்றது ஆகிய குற்றங்களின் பேரில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சுங்கத் துறையின் மத்திய மண்டல உதவி இயக்குநர் முகமது சப்ரி சஹாட் கூறினார்.

அந்த நான்கு கொள்கலன்களும் கடந்த மே 25, ஜூன் 8 மற்றும் ஜூன் 21 ஆம் தேதிகளில் கிள்ளான் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சிக்கின. இது தவிர ஓப்ஸ் கொண்ட்ராபிரான் 2 நடவடிக்கை கூட்டரசு பிரதேசம், சிலாங்கூர், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் ஆகிய இடங்களை மையமாக கொண்டு ஒருங்கிணைந்த அளவில் மேற்கொள்ளப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த கொள்கலன்களில் 902,000 வெள்ளி மதிப்புள்ள சிகரெட்டுகள், 58,640 வெள்ளி மதிப்புள்ள ஸாம் ஸாம் நீர் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்றார் அவர்.

கைப்பற்றப்பட்ட பொருள்கள் யாவும் நாட்டிற்குள் இறக்குமதி செய்வதற்கு தடை செய்யப்பட்டவையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக இந்த கடத்தல் பொருள்கள் யாவும் வேறு பொருள்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தன என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :