ECONOMYMEDIA STATEMENT

போர்க்கப்பல் நிதியில் மோசடி- கடற்படையின் முன்னாள் தளபதிக்கு எதிராக குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஆக 16- அரச மலேசிய கடற்படைக்காக கடலோர போர்க்கப்பல்களை (எல்.சி.எஸ்.) நிர்மாணிக்கும் திட்டத்தில் 2 கோடியே 10 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளியை மோசடி செய்ததாக போஸ்டட் நேவல் ஷிப்யார்ட் சென். பெர்ஹாட் நிறுவன (பி.என்.எஸ்.) முன்னாள் நிர்வாக இயக்குநர் டான்ஸ்ரீ அகமது ரம்லி முகமது நோர் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

நீதிபதி சுஸானா ஹூசேன் முன்னிலையில் தமக்கு எதிராக வாசிக்கப்பட்ட அந்த மூன்று குற்றச்சாட்டுகளையும் கடற்படையின் முன்னாள் தளபதியான அகமது ரம்லி (வயது 78) மறுத்து விசாரணை கோரினார்.

பி.என்.எஸ். நிறுவனத்தின் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்த அகமது ரம்லி, கடந்த 2010 ஜூலை 26 மற்றும் 2011 மார்ச் 25 தேதிகளுக்கு இடையே பி.என்.எஸ். நிறுவனத்தின் இயக்குநர் வாரியத்தின் ஒப்புதல் இன்றி சரிக்காட் செதாரியா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு 1 கோடியே 35 லட்சத்து 41 ஆயிரத்து 140 வெள்ளியை மாற்றியதன் மூலம் நம்பிக்கை மோசடி புரிந்ததாக அவருக்கு எதிரான முதலாவது குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2010 அக்டோபர் 19 மற்றும் 2011 மே 4 ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இயக்குநர் வாரியத்தின் ஒப்புதல் இல்லாமல் 13 லட்சத்து 60 ஆயிரத்து 716 வெள்ளியை சரிக்காட் ஜே.எஸ்.டி. கார்ப்பரேஷன் நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு மாற்ற ஒப்புதல் அளித்ததாக அவர் இரண்டாவது குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த 2010 அக்டோபர் 28 மற்றும் 2010 நவம்பர் 22 ஆகிய தேதிகளுக்கு இடையே சரிக்காட் சோஸ்மெரின் அர்மாடா லிமிடெட் நிறுவனத்திற்கு 61 லட்சத்து 82 ஆயிரத்து 295 வெள்ளியை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்ததாக அவருக்கு எதிரான மூன்றாவது குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஈராண்டு முதல் 20 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 409வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.


Pengarang :