ECONOMYMEDIA STATEMENT

பறிமுதல் செய்யப்பட்ட வெ.28.3 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பொருள்களை போலீசார் அழித்தனர்

காஜாங், ஆக 24– பல்வேறு குற்றங்கள் தொடர்பில் பறிமுதல் செய்யப்பட்ட 28 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள பொருள்கள் இங்குள்ள பண்டார் பாரு பாங்கி போலீஸ் நிலையத்தில் இன்று அழிக்கப்பட்டன.

குற்றச் செயல்களுக்கு எதிரான ‘ஓப் டாடு‘, ‘ஓப் கொண்ட்ராபிரான்‘, ‘ஓப் லெட்ரிக்‘ ஆகிய நடவடிக்கைகளில் திறக்கப்பட்ட 170 விசாரணை அறிக்கைகளை இந்த பொருள்கள் உள்ளடக்கியுள்ளதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஜைட் ஹசான் கூறினார்.

அழிக்கப்பட்ட பொருள்களில் ஓப் டாடு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட 477,500 வெள்ளி மதிப்பிலான 2,386 கணினிகள் மற்றும் மடிக்கணினிகள், ஓப் கொண்ட்ராபிரான் நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட 12,121 டின் மதுபானங்கள் 512 போத்தல் மதுபானங்கள் 15,556 கார்ட்டன் சிகரெட்டுகளும் அடங்கும் எனக் கூறிய அவர், இவற்றின் மதிப்பு 16 லட்சம் வெள்ளியாகும் என்றார்.

இங்குள்ள காஜாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை அழிக்கும் பணிகளைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் ஏசிபி பகாருடின் மாட் தாயிப்பும் இந்த நிகழ்வை பார்வையிட்டார்.

குற்றவியல் சட்டத்தின் 406வது பிரிவின் கீழ் இப்பொருள்களை அழிப்பதற்கான அனுமதியை காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மற்றும் துணை பப்ளிக் புரோசிகியூட்டர்  வழங்கியிருந்ததாக முகமது ஜைட் சொன்னார்.


Pengarang :