ECONOMYMEDIA STATEMENT

கடையில் 65 வெள்ளியைக் கொள்ளையிட்டனர்- இருவருக்கு தலா 3 ஆண்டுச் சிறை

கோலாலம்பூர், ஆக 25- பல்வகைப் பொருள் விற்பனைக் கடையில் 65 வெள்ளி ரொக்கத்தைத் கொள்ளையிட்ட இரு ஆடவர்களுக்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று தலா மூன்றாண்டுச் சிறைத் தண்டனை விதித்தது.

குற்றவியல் சட்டத்தின் 395வது பிரிவின் கீழ் தங்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முகமது நாசீர் பாஹில் (வயது 36) மற்றும் அகமது சுஹாய்மி அஸ்மி (வயது 31) ஆகியோர் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி எமிலியா காஸ்வத்தி முகமது காலிட் இத்தண்டனையை வழங்கினார்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அதிகப்பட்சம் இருபதாண்டுச் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி வழங்க இச்சட்ட விதி வகை செய்கிறது.

அவ்விருவரும் கைது செய்யப்பட்ட தினமான கடந்த ஆகஸ்டு 18 ஆம் தேதியிலிருந்து இத்தண்டனை அமலுக்கு வருவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

இம்மாதம் 18 ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் செராஸ், தாமான் பெர்த்தாமாவிலுள்ள அந்த பல்வகைப் பொருள் விற்பனைக் கடையின் பணியாளரான 17 வயது பெண்ணை மிரட்டி 65 வெள்ளியைப் பறித்ததன் மூலம் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டதாக அவ்விரு ஆடவர்கள் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதனிடையே, அதே தினத்தில் செராஸ் வட்டாரத்தில் உள்ள இரு கடைகளில் 324.15 வெள்ளியை கொள்ளையிட்டதாக செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சித்தி அமினா கசாலி முன்னிலையில் மேலும் ஒரு குற்றச்சாட்டு அவர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டது.
இக்குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிரான தீர்ப்பை வரும் 26 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

இது தவிர, அதே தினத்தில் இரவு 8.49 முதல் 9.45 மணி வரையிலான காலக்கட்டத்தில் கடை ஒன்றில் மூன்று ஊழியர்களிடம் கொள்ளையிட்டதாக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை அவ்விருவரும் மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.


Pengarang :