ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மக்காவ் மோசடியில் சிக்கி .430,000 வெள்ளியை இழந்தார் அரசு ஊழியர் 

கங்கார், ஆக 26- சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினால் கலக்கமடைந்த அரசு பெண் பணியாளர் ஒருவர் மக்காவ் மோசடிக் கும்பலிடம் 429,000 வெள்ளியைப் பறிகொடுத்தார்.

ஐம்பது வயதான அந்த அரசு பணியாளர் புதிய தொலைபேசி எண்ணில் போஸ் மலேசியா அதிகாரி எனக்  கூறிக் கொண்ட நபரிடமிருந்து அழைப்பைப் பெற்றதாக ஆராவ் மாவட்ட போலீஸ் தலைவர்  சூப்ரிண்டெண்டன் அகமது மோஷின் முகமது ரோடி கூறினார்.

சபாவுக்கு அனுப்பப்படவிருந்த பொட்டலம் ஒன்றில் தடை செய்யப்பட்ட பொருள் அதாவது அந்த அரசு ஊழியரின் பெயர் கொண்ட அடையாளக் கார்டு மற்றும் ஐந்து ஏ.டி.எம். பணப்பட்டுவாடா கார்டுகள் உள்ளதாக கூறியுள்ளார் என அவர் தெரிவித்தார்.

எனினும், இது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று அந்த அரசு ஊழியர் கூறவே, சபா மாநில போலீஸ் நிலையத்திற்கு தாம் இணைப்பை ஏற்படுத்தித் தருவதாகவும் இதன் தொடர்பான புகாரை அங்கு தெரிவிக்கும்படியும் அந்த அனாமதேய நபர் தெரிவித்துள்ளார்.

சபா மாநில போலீஸ் நிலையம் எனக்  கூறப்பட்ட எண்களுடன் இணைப்பை பெற்ற போது “நீங்கள் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளீர்கள். இந்த வழக்கை சுமூகமான முறையில் தீர்க்க சில பண பரிமாற்றங்களைச் செய்யுங்கள்“ என பணித்துள்ளனர்.

பயத்தில் உறைந்து போன அந்த பெண் ஊழியர் மோசடிக் கும்பல் கொடுத்த வங்கிக் கணக்கில் 429,000 வெள்ளியை பத்து பரிமாற்ற நடவடிக்கைகள் மூலம் அனுப்பியுள்ளார் என்று அகமது மோஷின் சொன்னார்.

இந்த மோசடிச் சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து கடந்த புதன் கிழமை புகார் கிடைக்கப்பெற்றதாக கூறிய அவர், இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.


Pengarang :